ஊரடங்கு காலத்தில் வாடகை வாகனங்களுக்கு காலாவதியான ஆவணங்களை எந்தவித நிர்பந்தம் இன்றி புதுப்பிக்க உத்தரவிடவேண்டும் என்று முதல்வருக்கு மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி மாநில செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யத்தின் தொழிலாளர்கள் அணி மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 08.08.2020அன்று சென்னை அண்ணாநகர் ஆர்டிஓ அலுவலகத்தில் காலாவதியான ஆட்டோ எஃப்.சியை புதுப்பிக்க சென்ற ஆட்டோ ஓட்டுநர் தாண்டவமுத்து என்பவரிடம் அவரது வாகனத்திற்கான காப்பீடு முடிவடைந்து விட்டது என்பதை காரணமாக கூறி அவரது ஆட்டோ எஃப்.சியை அதிகாரிகள் புதுப்பிக்க மறுத்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தனது வாகனத்திற்கு தானே தீயிட்டு கொழுத்திய நிகழ்வு கடும் அதிர்ச்சியை தருகிறது. 

சுமார் நான்கு மாதங்களாக ஊரடங்கு அமுலில் இருக்கும் சூழலில் ஆட்டோ, கார், பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்துகள் முற்றிலுமாக இயக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது தான் ஊரடங்கில் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் பல்வேறு கடுமையான  கட்டுப்பாடுகளோடு இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாதங்களாக வாகனங்கள் இயக்கப்படாமல் இருந்த காரணத்தால் முற்றிலுமாக வருமானமின்றி இருந்த வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் வாடகை வாகன உரிமையாளர்கள் ஊரடங்கு காலகட்டத்தில் காலாவதியான  வாகன காப்பீடுகளை புதுப்பிக்க பணமின்றி தவித்து வரும் சூழலில் அவர்களுக்கு கைகொடுத்து காத்திட வேண்டிய ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் காப்பீடு இருந்தால் தான் வாகனங்களை எஃப்.சியை புதுப்பிக்க முடியும் என்பது ஏற்புடையதல்ல.

எனவே ஊரடங்கு காலகட்டத்தில் காப்பீடு காலாவதியான வாடகை வாகனங்களுக்கு தடையின்றி எஃப்.சியை புதுப்பிக்க ஆர்டிஓ அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். அதே சமயம் மன உளைச்சலால் தனது வாகனத்திற்கு தானே தீயிட்டு கொழுத்திய ஆட்டோ ஓட்டுநர் தாண்டவமுத்து மீது அண்ணாநகர் காவல்நிலையத்தில் பதிந்துள்ள வழக்கை ரத்து செய்து, அவரது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை காத்திட அவருக்கு மாற்று ஆட்டோ வழங்கிட தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி சார்பில் வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.