திமுக அமைச்சர்களில் எத்தனை பேர் கோடீஸ்வரர்கள்? எத்தனை பேர் பட்டதாரிகள்? எத்தனை பேர் கடனாளிகள்” உள்ளிட்ட சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்து உள்ளது. எனினும், திமுக கடந்த காலங்களில் வாங்கிய கெட்ட பெயர்களை போக்கும் வகையில் புதிதாக முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் திறம் பட ஆட்சி செய்து வருகிறார்.

இந்நிலையில், “திமுக அமைச்சர்கள் 34 பேரில் 32 நபர்களின் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்றும் அவர்களின் சொத்து மதிப்பு, கல்வி ஆகியவை குறித்து” ஏடிஆர் என்கிற Association for Democratic Reforms எனப்படும் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதன் படி, “திமுக அமைச்சர்களில் 88 விழுக்காடு பேர் குற்ற வழக்கு உள்ளவர்கள். அதாவது, 28 அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பது இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது. 

அத்துடன், “16 அமைச்சர்கள் தீவிரக் குற்ற வழக்கில் தொடர்புடையவர்களாக உள்ளனர் என்றும், திமுக அமைச்சர்கள் 31 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதாவது, 97 சதவீதம் பேர் திமுக அமைச்சர்களில் கோடீஸ்வரர்களாக இருப்பதும் இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது.

“தற்போதைய திமுக அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பானது 1.76 கோடி ரூபாயாக இருக்கிறது. இவர்களில், குறைவான சொத்து மதிப்பைக் கொண்டவர், பத்மநாபபுரம் தொகுதியைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவார். இவரது சொத்து மதிப்பானது, 23 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய்” ஆகும். 

அதே போல், “திமுக அமைச்சர்கள் அதிகபட்சமாகக் கடன் பாக்கி வைத்திருப்பது ராணிப்பேட்டை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.காந்தி ஆவார். இவருக்கு 14.46 கோடி ரூபாய் கடன் பாக்கி இருப்பது, தற்போது தெரிய வந்திருக்கிறது.

மேலும், “திமுக அமைச்சர்களில் 28 சதவீதம் பேர் அதாவது, 9 அமைச்சர்கள் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறார்கள். 23 அமைச்சர்கள் பட்டதாரிகளாகவும், அதற்கு மேல் படித்தவர்களாகவும்” இருக்கிறார்கள். 

முக்கியமாக, “திமுக அமைச்சரவையில் 2 பெண்கள் இடம் பெற்று உள்ளனர். 

பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தான் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டு உள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தேசியக் கல்லூரியில் அரசியலில் பட்டம் பெற்றுள்ளதாகத் தனது வேட்பு மனுவில் கூறியிருக்கிறார்.

குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்” ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பின் ஆய்வில் தற்போது தெரிய வந்திருக்கிறது.