சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டாலே தனிநபர் மற்றும் அவரின் குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா பரிசோதனை செய்பவர்கள் அடுத்த 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்பதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால், பொதுமக்களின் பயத்தை போக்கும் வகையில் இதற்குப் பதில் அளித்துப் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “சென்னையில் கொரோனா பரிசோதனை செய்யும் நபர்கள், அவர்களது குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப் படுத்தப் படுவர் என்கிற உத்தரவு, நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையே தவிர, மக்களை பயமுறுத்தும் நோக்கமல்ல” என்று குறிப்பிட்டார்.

Reason behind 14 days quarantine for COVID

மேலும், “சென்னையில் அதிகமான ஆய்வகங்கள் உள்ளதாகவும், அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளலாம்” என்றும் அவர் கூறினார். 

அத்துடன், “மற்ற மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் பெரும்பாலும் சோதனை இல்லாமல் தனிமைப்படுத்தி வருவதாகவும், இது சென்னையில் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கம் மட்டுமே” என்றும் சுட்டிக்காட்டினார்.

“இதுபோன்ற நடவடிக்கையின் மூலம், சென்னையில் கொரோனா பரவலை வெகுவாக கட்டுப்படுத்தலாம்” என்றும், அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மேலும், கொரோனா பரிசோதனைக்கு வருபவர்கள் அனைவரும், தங்களது சுய விபரங்களை வழங்குவதோடு அவர்களுடன் கடந்த 15 நாட்களில் தொடர்பில் இருந்தவர்களின் தகவல்களையும் கண்டிப்பாக வழங்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

Reason behind 14 days quarantine for COVID

இதனைத்தொடர்ந்து பேசிய சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், “கொரோனா தொற்று பரிசோதனை செய்த பின்னர், முடிவுகள் வரும் இரண்டு நாட்களுக்குள் தொற்று பாதித்து உள்ள நபர் மூலம் மேலும் பலருக்கும் தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக” கூறினார்.

“இந்த விதமான பரவலைத் தடுக்கும் நோக்கத்தில்தான், சென்னை மாநகராட்சி இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாகவும்” சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.