முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் சிக்கல் என்ன? எதற்காக இபிஎஸ் -
ஓபிஎஸ் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஓய்வு எடுக்கச்செல்லும் கோடநாடு எஸ்டேட்டில், அவர் மறைவுக்குப் பிறகு நடந்த கொலை மற்றும் கொள்ளை  சம்பவங்கள் தொடர்பான வழக்கு ஒன்று, நீதிமன்றத்தில் தற்போது வரை நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில், இது வரை 10 பேர் கைது செய்யப்பட்டு
தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சயான் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், நேற்று முன்தினம் போலீாரின் முன்பாக அவர் விசாரணைக்கு ஆஜராகிப்
பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். 

அப்போது, முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம், கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளைபோன சில முக்கிய ஆவணங்களை அளித்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்ததாகத் தெரிகிறது. இதனை, போலீசார் வீடியோ பதிவாகப் பதிவு செய்து கொண்டனர். இந்த விசயம், வெளியாகி மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக வட்டாரத்தில் பெரும் பீதியைக் கிளப்பியது.

அதே நேரத்தில், இந்த தகவல்கள் முழு விவரங்களுடன் தொடர்ந்து பத்திரிகைகளில் செய்தியாக வெளியான நிலையில், இது எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி
பழனிசாமிக்கு எதிராக நிச்சயம் முடியும் என்ற விமர்சனமும் எழுந்தது. இதனால், இந்த வழக்கு எடப்படியார் பக்கம் திரும்பும் என்றே கூறப்பட்டது.

இந்த நிலையில் தான், நேற்றைய தினம் தமிழக சட்டசபை தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, அதாவது விவாதம்  தொடங்குவதற்கு முன்னதாகவே, “நேரமில்லா நேரத்தில் பேச வேண்டும்” என்று கூறி, சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். அப்போது, அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, “கோடநாடு விவகாரத்தில், தமிழக அரசு பல்வேறு பொய் வழக்குகளைப் பதிவு செய்து வருவதாக” எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

அதனையடுத்து, அவருக்கு தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டது.

இதற்குப் பதில் அளிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். இதனால், 

முதலமைச்சரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசை கண்டிக்கும் விதமாக, அதிமுக உறுப்பினர்கள் அவை வாயில் அமர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களாகவே, சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின், செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “திட்டமிட்டு  அரசியல்  காழ்ப்புணர்ச்சியோடு  என்னை பழிவாங்கப் பார்க்கிறார்கள் என்றும், கோடநாடு வழக்கில் என் பெயரை சேர்க்கச் சதி செய்கிறார்கள்” என்றும், திமுக அரசை
பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார்.

இதனையடுத்தே, இபிஎஸ் - ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த நேரத்தில் சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அதிமுகவினரின் போக்கு உள்ளது” என்று, மிக
கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.