தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் இல்லாத மருத்துவமனையாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மாறியுள்ளது. 

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியிருந்தது. ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வந்தது. அதனைத்தொடர்ந்து கொரோனா மற்றும் ஒமிக்ரான் கணிசமாக குறைந்ததையடுத்து தமிழ்நாடு அரசு கொரோனா கட்டுப்பாடுகளை விளக்கிக்கொண்டது. இருப்பினும் முககவசம் அணிவதும் தனிமனித இடைவெளி கடைபிடிப்பது போன்ற கட்டுப்பாடுகளை மட்டும் செய்யவேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. 

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்த முதல் நபரை சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் தயங்கிய நிலையில் எவ்வித தயக்கமும் இல்லாமல் மருத்துவர்கள் குழு அந்த நபருக்கு சிகிச்சையளித்தனர். அன்று முதல் இன்று வரை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. அதில் 96% நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4% பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

அதனைத்தொடர்ந்து வந்த நிலையில் மார்ச் 7-ம் தேதி முதல் இன்று காலை வரை என  இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இம்மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தமிழகத்தின் பெரிய மருத்துவமனையாக உள்ளது. மொத்தம் உள்ள 2050 படுக்கைகளும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதிக படுக்கைகள் மட்டுமல்லாமல், அதிக நோயாளிகளுக்கு சிச்சையளித்த மருத்துவமனையாக திகழ்கிறது. 

மேலும் கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த பொழுது, 47.3 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒரு நாளைக்கு தேவைப்பட்ட நிலையிலும் அரசின் வழிகாட்டுதலில், மருத்துவர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பான முறையில் கையாலப்பட்டது. 2050 படுக்கைகளும் நிரம்பிய நிலையிலும், மற்ற இடங்களில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தியும், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். 

இப்படியான கொரோனா போரில் களத்தில் இருந்து மக்களை காப்பாற்றி வெற்றிக்கண்டுள்ளது அரசு மருத்துவமனை. இன்று கொரோனா நோயாளி இல்லாத நிலையை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இம்மருத்துவமனை எட்டியுள்ளது. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட டவர் 3 என்ற கட்டிடம் முழுவதும் தற்பொழுது புறநோயாளிகளுக்கான வார்டாக மாற்றப்பட்டுள்ளது.