“தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர்கள் தற்போது யாருமில்லை” என்று நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை தனியார் நட்சத்திர ஓட்டலில்  செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்,  “தமிழகத்தில் தற்போது திறமையான தலைவர்கள் யார் இருக்கிறார்கள்?” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அப்போது, அரங்கமே அமைதியானது.

Rajinikanth political speech DMK ADMK

2 வினாடிகள் சின்ன இடைவெளி விட்டு மீண்டும் பேசத் தொடங்கிய ரஜினிகாந்த், “தமிழகத்தில் மிகப்பெரிய ஆளுமைமிக்க தலைவர் தற்போது இல்லை. ஆளுமைமிக்க தலைவரின் வாரிசு என்று நிரூபிக்க முயல்பவரை, சந்திக்க வேண்டும். 

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை, முழு கஜானாவுடன் இருப்பவர்களைத் தேர்தல் களத்தில் சந்திக்க வேண்டும். அசுர பலத்துடன் இருக்கும் 2 மிகப்பெரிய ஜாம்பவான்களை, எதிர்கொள்ள வேண்டி உள்ளது” என்று ரஜினிகாந்த் அனல் பறக்க அதிரடியாகப் பேசி அரங்கத்தையே, அதிர வைத்தார்.

மேலும், “திமுகவிற்கு வாக்களித்தவர்கள் 30 சதவீதம் கட்சிக்காகவும், 70 சதவீதம் கலைஞருக்காகவும் வாக்களித்தனர். அதிமுக விற்கு வாக்களித்தவர்கள் 30 சதவீதம் கட்சிக்காகவும், 70 சதவீதம் ஜெயலலிதாவுக்காகவும் வாக்களித்தனர், ஆனால், அந்த 2 ஜாம்பவான்களும் தற்போது இல்லை” என்று அரசியல் நுணுக்கங்களுடன் பேசினார்.

அத்துடன், “ வரும் 2021-ல் ஆட்சி மாற்றம் எனும் புரட்சியைத் தமிழக மக்கள் நிகழ்த்திக் காட்ட வேண்டும்” என்றும் சூளுரைத்தார்.

“தமிழக மக்கள் தங்கள் எதிர்கால சந்ததியினருக்காக 2021-ல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” என்றும் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார். 

Rajinikanth political speech DMK ADMK

தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த் “ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று தெரிந்தும், நான் அரசியலுக்கு வந்து என்ன பலன்? நான் அரசியலுக்கு வரவில்லை என்று கிண்டல் செய்வார்கள், விமர்சிப்பார்கள், வேறு என்ன செய்ய முடியும்?” என்று கொஞ்சம் கோபமாகவும், காட்டமாகவும் கூறினார்.

“இப்போதே 71 வயதாகிவிட்டது. அடுத்த முறை மீண்டும் ஆட்சிக்கு வருகிறேன் என்று எப்படி செயல்பட முடியும்?
என்னுடைய கட்சி நிர்வாகிகள், நான் கூறியதை ஏற்று மக்களைச் சந்திக்க வேண்டும். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் என்கிற முழக்கத்தோடு மக்கள் மன்ற நிர்வாகிகள், மக்களைச் சந்திக்க வேண்டும்” என்று கட்டளையாகவே ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, “மக்களிடம் மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்த உடன் நான் அரசியலுக்கு வருகிறேன்” என்று அதிரடியாகக் கூறிவிட்டு, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் ரஜினிகாந்த் அங்கிருந்து விரைந்து சென்றார்.

இதனிடையே, இதுவரை இல்லாத வகையில், நடிகர் ரஜினிகாந்த் இவ்வளவு வெளிப்படையாகவும், அதிரடியாகவும் பேசியது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.