உடல் நிலையில் ஏற்பட்டுள்ள திடீர் குறைபாடு காரணமாக, நடிகர் ரஜினிகாந்த் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாகத் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

மருத்துவர்களின் அறிவுரைகளையும் மீறி நடிகர் ரஜினிகாந்த், “அண்ணாத்த” படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஐதராபாத் சென்றார். அங்கு, சுமார் 120 பேர் கொண்ட படக்குழுவினருக்கு மத்தியில் தினமும் கொரோனா பரிசோதனை செய்து, ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி முகக்கவசம் அணிவித்து மிகவும்  எச்சரிக்கையாகவே தினமும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்தார் நடிகர் ரஜினிகாந்த். இப்படி பாதுகாப்பான முறையில் படப்பிடிப்பு நடத்தினாலும், அதையும் மீறி அந்த படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதன் காரணமாக, உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டன. அத்துடன், “அண்ணாத்த” படப்பிடிப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டது. அப்போது, நடிகர் ரஜினிக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்ததாக கூறப்பட்டது. ஆனாலும், நடிகர் ரஜினிக்கு அவருக்கு ரத்த கொதிப்பில் ஏற்றத்தாழ்வு இருந்துள்ளது. அப்படி இருந்தால் அவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக மாற்றப்பட்ட மாற்று சிறுநீரகம் மிக கடுமையாகப் பாதிக்கப்படும். 

இதன் காரணமாக, 3 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. 

இதனால், முதலில் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதை ஆண்டவன் தனக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கையாகப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, மன அழுத்தத்திலும் இருந்த தந்தை ரஜினியிடம், “இந்த சூழல் நிலையில், அரசியல் வேண்டாம். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால், கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டால், அது இன்னும் பெரும் ஆபத்தை உங்களுக்கு உண்டாக்கி விடும்” என்று, அன்போடு அப்பாவை எச்சரித்திருக்கிறார் என்று கூறப்பட்டது.

குறிப்பாக, ரஜினியின் 2 வது மகள் செளந்தர்யாவும், ரஜினியிடம் இதே கோரிக்கையை அன்பாக கூறி, தந்தையின் மனதை மாற்றியிருக்கிறார்.

ரஜினிகாந்தின் மகள்கள் இருவருமே, “அப்பா, உங்கள் உடல் நிலை தான் எங்களுக்கு முக்கியம். மற்ற எந்த விஷயத்திலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டாம்” என்று, ரஜினியிடம் அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனால், அவர் இன்னும் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வந்தார் என்று கூறப்பட்ட நிலையில், அதன் பிறகே “நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று, நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, “இறப்பு என்னைத் தழுவும் வரை இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன்” என்று, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.

அதே நேரத்தில், ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தி, ரஜினியின் வீட்டின் முன்பு அவரது ரசிகர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினியின் இந்த திடீர் முடிவால் அவரது சில ரசிகர்களை ஆத்திரமடைந்தனர். மேலும் சிலர் அவரது வீட்டின் முன் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், “தமிழ்நாடு மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற மன உளைச்சலில் ரஜினி இருப்பதாக” அவருடன் பயணித்த அர்ஜுன மூர்த்தி தெரிவித்தார். 

இந்நிலையில், ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட ரஜினி, உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, நடிகர் ரஜினி, அடுத்த வாரம் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளதாகவும், அதன் பிறகே இந்தியா திரும்பாவர் என்றும் தகவல்கள் கிசுகிசுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.