ஜல்லிக்கட்டை நேரில் பார்த்த பிறகு “தமிழ் உணர்வை யாராலும் நசுக்க முடியாது!” என்று, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சூளுரைத்துள்ளார்.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியானது நேற்றைய தினம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் காளைகள் வெற்றி பெற்றது.

அதே போல், “அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!” என்று, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்றைய தினம் தமிழில் டிவிட் செய்து, “மதுரை ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க இன்று தமிழகம் வருகிறேன்” என்றும், குறிபிபட்டு இருந்தார். அவர் குறிப்பிட்டது படியே, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக நேற்று மதுரை வந்தடைந்தார். அங்கிருந்து, பலத்த பாதுகாப்புடன் அவனியாபுரத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், அங்கு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்த்து ரசித்தார்.
 
அத்துடன், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ராகுல் காந்தி - உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் அருகருகே அமர்ந்து போட்டியை பார்த்து ரசித்தனர்.

அப்போது, ராகுல் காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்த்த போது, ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது.

அதாவது, மாடுபிடி வீரர்கள் பரபரப்பாகக் காளைகளைப் பிடிக்க முயன்றதைப் பார்த்த ரசித்துக்கொண்டு இருந்த ராகுல் காந்தி, ஆர்வத்தில் எழுந்து நின்று பார்க்க ஆரம்பித்தார். அந்த சமயம் பார்த்து, சீறி பாய்ந்த காளை ஒன்று மாடுபிடி வீரர்களுக்கு கடுமையாக போக்கு காட்டியது. அந்த நேரத்தில், திடீரென வீரர்களைப் பார்த்து காளை வந்ததும், அதற்குப் பயந்து மேடை அருகில் உள்ள தடுப்பில் வீரர்கள் சிலர் வேகமாக ஏறினர். அங்கு, ராகுல் காந்தி நின்றிருந்த 

இடத்தில் வீரர்கள் ஏறி வருவதைப் பார்த்த பாதுகாவலர் ஒருவர் வேகமாக அவர்களைத் தடுக்க முயன்றார். இதனை கவனித்த ராகுல் காந்தி, சட்டெனப் பாதுகாவலரின் கையை பிடித்து தடுத்து நிறுத்தினார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

அதன் தொடர்ச்சியாக, அந்த ஜல்லிக்கட்டு விழா மேடையிலேயே பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “ஜல்லிக்கட்டை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என இன்று நான் அறிந்துகொண்டேன்” என்று கூறினார். 

மேலும், “தமிழர் பாரம்பரியத்தைக் காக்கவேண்டியது என் கடமை” என்றும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டைப் பார்த்து ரசித்த ராகுல் காந்தி பேசினார்.

இதனையடுத்து, தென்பழஞ்சி என்ற ஊருக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டார். பின்னர் மக்களுடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். இந்த படமும் இணையத்தில் வைரலானது.

அதன் தொடர்ச்சியாக மதுரை விமானம் நிலையம் திரும்பிய ராகுல் காந்தி, செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “தமிழ் உணர்வை யாராலும் நசுக்க முடியாது” என்று, சூளுரைத்தார்.

முதலில், “தமிழ் நாட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்” என்று, அவர் தெரிவித்தார். 

அதைத் தொடர்ந்து, “தமிழ் மக்கள் ஜல்லிக்கட்டை ஏன் ஊக்குவிக்கிறார்கள் என்பதைத் தான் அறிந்து கொண்டேன் என்றும், ஜல்லிக்கட்டு விளையாட்டின் மூலம் காளைகள் துன்புறுத்தப்படுவதாகச் சிலர் கூறுவது முற்றிலும் தவறு” என்றும், அவர் கூறினார். 

“தமிழ் மக்களின் உணர்வுகளையும், மொழியையும் யாராலும் நசுக்க முடியாது என்றும், அப்போது ராகுல் காந்தி சூளுரைத்தார்.

அத்துடன், “ஜல்லிக்கட்டில் பங்கேற்ற இளைஞர்களுக்கு வாழ்த்துக்களையும்” அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, “விவசாயிகளை அழிக்க மத்திய முயற்சி செய்வதாகவும், அவர்களை நசுக்கி, வளம் பெறலாம் என எண்ணினால் வரலாற்றைச் சற்று திரும்பிப் பார்க்க வேண்டும்” என்றும், ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார். 

“தொழிலதிபர்களுக்கு ஆதரவாகப் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுவதாகவும்” அப்போது, ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.