புதுச்சேரியில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 53 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். 

தமிழ்நாடு - புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள ராதாபுரத்தைச் சேர்ந்த 53 வயது முதியவர் ஒருவர், அந்த பகுதியில் தையல் கடை ஒன்றை நடத்தி வருகிறார். 

கடை வியாபார விசயமாக, அருகில் உள்ள துணிக்கடைக்கு அந்த முதியவர் அடிக்கடி சென்று வருவது வழக்கம். அப்படி தான் கடந்த மாதம் 29 ஆம் தேதி அந்த துணிக்கடைக்கு அந்த முதியவர் சென்றுள்ளார். அப்போது, அந்த துணிக்கடைக்கு ஒரு 12 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் ஷாப்பிங் செய்ய அங்கு வந்திருந்தார்.

அப்போது, அந்த 12 வயது சிறுமியைத் தனியாக அழைத்துச் சென்ற அந்த 53 வயது முதியவர், அந்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்கள் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, தனது பெற்றோர்களிடம் அந்த சிறுமி, தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து கூறி கதறி அழுள்ளார். இதனால், பதறிப்போன சிறுமியின் பெற்றோர், அந்த முதியவரை அங்குத் தேடி உள்ளனர். ஆனால், அதற்குள் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிகிறது.

இதனையடுத்து. சிறுமியை அழைத்துக்கொண்டு, அவரது பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த முதியவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். 

இந்நிலையில், தலைமறைவாக இருந் அந்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல், திருவண்ணாமலை அருகே 14 வயது சிறுமியைத் திருமணம் செய்த இளைஞரை, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

திருவண்ணாமலை மாவட்டம் கொத்தந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் - மல்லிகா தம்பதியின் மகன் 25 வயதான பிரசாந்த் என்ற இளைஞர், கடந்த 31 ஆம் தேதி, அந்த பகுதியில் உள்ள பெருமணம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் - சரோஜா தம்பதியின் மகளான 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து, இளைஞர் பிரசாந்த் 14 வயது சிறுமியை குழந்தை திருமணம் செய்து கொண்டது தொடர்பாக, அந்த மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நல அமைப்புக்கு ரகசியமாகப் புகார் வந்துள்ளது. இது தொடர்பாகக் குழந்தைகள் நல அதிகாரி அசோக் குமார், திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அசோக்குமார் புகார் அளித்தார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மகளிர்  போலீசார், விரைந்து சென்று பிரசாந்த்தை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்தனர். 

மேலும், பிரசாந்த் சிறுமியை திருமணம் செய்ய உடந்தையாக இருந்த பிரசாந்த்தின் பெற்றோர் மற்றும் அந்த 14 வயது சிறுமியின் பெற்றோர் ஆகிய 4 பேரை மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

இதனிடையே, மத்திய அரசு கொண்டு வந்த “பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ” என்ற திட்டத்தின் படி, “பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், படிக்க வைப்போம்” என்று திருவண்ணாமலை முழுவதும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி சிறப்பாகச் செயல்படுத்திச் சிறப்பு விருதும் பெற்றது குறிப்பிடத்தக்கது.