சிறுவர் சிறுமியரிடம் ஆபாசமாக பேசி  யூடியூப்பில் வீடியோ வெளியிட்ட புகாரில் தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் தற்போது அதிரடியாகக் கைது செய்யப்பட்டு உள்ளார்.

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை, சட்ட விரோதமாகப் பதிவிறக்கம் செய்து சில கும்பல்கள் விளையாடி வந்தனர். இந்த சூழலில், “பப்ஜி விளையாட்டில் உள்ள ட்ரிக்ஸ்” பற்றி பேசுவதற்காகக் கடந்த 2019 ஆம் ஆண்டு மதன் என்பவர், யூடியூப் சேனல் ஒன்றை உருவாக்கினார். 

கடந்த 2 ஆண்டுகளாகக் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால், சமூக வலைத்தளங்களில் சிறுவர், சிறுமிகள் அதிகம் மூழ்கி இருந்தனர். இப்படியான சிறுவர் சிறுமிகளைக் குறிவைத்து ஆன்லைன் கேமான பப்ஜி, ப்ரீ ஃபையர் உள்ளிட்ட  விளையாட்டில் நேரத்தைச் செலவிட்டு வந்தவர்களை, அவர் தன் பக்கம் அதிகமான கவனத்தை ஈர்த்தார்.

இதனால், “மதன்' யூடியூப் சேனலுக்கு” இது வரை 7 லட்சத்திற்கு அதிகமாகவும், “டாக்ஸிக் மதன் 18+” யூடியூப் சேனலுக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் Subcribers-ம் தற்போது உள்ளனர்.

 ஆன்லைனில் விளையாடும் போது, தன்னுடன் விளையாடும் சக போட்டியாளர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளில் திட்டுவதை வாடிக்கையாகவே கொண்டிருந்தார் யூடியூபர் மதன். தன்னுடன் ஆன்லைனில் விளையாடுவது பெண்கள் என்றால், அவரது வார்த்தைகளில் ஆபாசம் உச்சத்தில் இருக்கும். 

இப்படி, ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்தது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் படி, சென்னையில் பதிவான வழக்குகள் தொடர்பாக மதனை போலீசார் நேரில் ஆஜராகச் சொன்ன நிலையில் தான், அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமறைவானார். இதனையடுத்து, சென்னை பெருங்களத்தூரில் உள்ள மதன் வீட்டில் இருந்து அவரது தந்தை மாணிக்கம், சேலம் மாவட்டத்திலுள்ள அவரது மனைவி கிருத்திகா மற்றும் 8 மாதக் கைக்குழந்தையை அழைத்து வந்து, சென்னை சைபர் கிரைம் போலீசார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையில், “மதனும் கிருத்திகாவும் இணைந்து 3 யூடியூப் சேனல்களைத் தொடங்கி பப்ஜி விளையாட்டு குறித்து பேசி சேனலில் வெளியிட்டு வந்து உள்ளனர். ஆனால், அதில் போதுமான பார்வையாளர்கள் கிடைக்காத நிலையில், குறுக்கு வழியில் விரைவில் பணம் சம்பாதிப்பதற்காக, பெண்கள் குறித்து ஆபாசமாகப் பேசி மதன் வீடியோ வெளியிடத் தொடங்கியதாகவும், இதற்கு சிறுவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது என்றும், இதனால் மாதத்திற்கு 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து வந்ததாகவும், அப்பட கிடைத்த பணத்தில்  பெருங்களத்தூரில் 2 சொகுசு பங்களாக்கள், 2 சொகுசு கார்கள் வாங்கியதாகவும்” அவர் மனைவி கிருத்திகா கூறினார். 

இதனால், அவர்கள் பயன்படுத்திய லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருள்களையும், இதன் மூலம் கிடைத்த பணத்தில் வாங்கிய 2 சொகுசு கார்கள், 2 பங்களா ஆகியவற்றைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கணவர் மதன் குறித்த கேள்விக்கு கிருத்திகா உரிய பதிலளிக்கவில்லை என்று கூறிய தனிப்படை போலீசார், கணவன் மதனுக்கு உடந்தையாக இருந்த கிருத்திகாவை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, வருகிற 30 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

இந்த சூழலில் தான், முன் ஜாமீன் கோரி மதன் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, மதனின் ஆடியோக்களை கேட்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, கடும் அதிர்ச்சியடைந்தார். பின்னர், “மதனின் பேச்சை காது கொடுத்து கேட்கமுடியாத அளவிற்கு இருப்பதாக” நீதிபதி தண்டபாணி வன்மையாகக் கண்டனம் தெரிவித்தார். 

மேலும், “யூடியூப் பதிவில் மதன் பேசியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா?” என மனுதாரர் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியபோது, வழக்கிற்காக சில பகுதிகளைக் கேட்டதாகப் பதிலளித்தார். இதனையடுத்து, “அந்த பதிவுகளை முழுமையாகக் கேட்டுவிட்டு நாளை வந்து வாதிடும்படி” நீதிபதி உத்தரவிட்டு வழக்கை இன்று ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில், தனிப்படை போலீசார் தலைமறைவாக இருக்கும் மதனை கைது செய்யும் நோக்கில் அவரை மிகத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இப்படியா நிலையில் தான், தர்மபுரியில் பதுங்கியிருந்த பப்ஜி மதனை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். ஏற்கனவே மதனின் மனைவி கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், தற்போதும் மதனும் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் இன்று மாலைக்குள் சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என்றும், காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, பப்ஜி மதன் மீது இது வரை 120 புகார்கள் ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.