“PSBB பள்ளியை நானோ அல்லது என் மகளோ நிர்வகிக்கவில்லை” என்று, ஆசிரியர் பாலியல் புகார் குறித்து, நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் தற்போது விளக்கம் அளித்து உள்ளார்.

சென்னை கே.கே. நகரில் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி மிகவும் புகழ் பெற்ற பள்ளியாகத் திகழ்ந்து வருகிறது. இந்த பள்ளியை அனைவரும் சுருக்கமாக பிஎஸ்பிபி பள்ளி என்று அழைப்பார்கள். இந்த பள்ளியில், ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

குறிப்பிட்ட இந்த ஆசிரியர் மட்டும், மாணவிகளிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்து கொண்டதாகத் தொடர்ந்து எழுந்த புகாரை அடுத்து, மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து வரும் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் திடீரென்று போர்க்கொடி தூக்கினார்கள். இது தொடர்பாக, திமுக எம்.பி. கனிமொழி கவனத்திற்குச் சென்ற நிலையில், இது தொடர்பாகத் தனது கண்டனத்தை டிவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து, சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது விசாரணை நடத்த போலீசார் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் அடுத்தடுத்து அந்த பள்ளிக்குச் சென்று வந்தனர். 

முக்கியமாக, “பிஎஸ்பிபி பள்ளி புகார் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்னும் இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது நிரூபிக்கப்பட்டால், துறை ரீதியிலான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும்” என்று, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதிப்படத் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக, சம்மந்தப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலனை பணியிடை நீக்கம் செய்து, பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.

இந்நிலையில், சென்னை பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் குறித்து, அந்த பள்ளியின் புரவலர்களுள் ஒருவரான நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் தற்போது தனது கருத்தையும், விளக்கத்தையும் அளித்து உள்ளார்.

அந்த விளக்கத்தில், “சென்னை கே.கே. நகரில் அமைந்துள்ள பிஎஸ்பிபி பள்ளியில் பணியாற்றும் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர், மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாகப் புகார் எழுந்துள்ளது. இது பற்றி பள்ளி நிர்வாகிகளுக்குப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தரப்பிலிருந்து ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் என்னுடைய கவனத்திற்கு வந்தவுடன் பள்ளி நிர்வாகிகளுக்குக் கடிதம் ஒன்றை நான் எழுதியுள்ளேன்” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

மேலும், அந்த கடிதத்தில், “மாணவர்கள் பாதிக்காத வகையில், உரிய முறையில் விசாரணை நடத்தி, ஆசிரியர் மீது தவறு இருந்தால் அவர் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, வலியுறுத்தி உள்ளேன்” என்றும் தெரிவித்து உள்ளார்.

அத்துடன், “தனது தாயார் உருவாக்கிய இந்த பள்ளிக்கு எவ்விதமான அவப்பெயரும் ஏற்படாத வகையில், பள்ளி நிர்வாகம் நடந்துகொள்ள வேண்டும் என்றும், அந்தக் கடிதத்தில் நான் வலியுறுத்தி உள்ளேன்” என்றும், அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக, “இந்த பள்ளியை நிர்வகிப்பதில் தனக்கோ, தன் மகளுக்கோ எவ்விதமான பங்கும் இல்லை” என்றும், நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் விளக்கம் அளித்து உள்ளார். 

இந்த சூழலில், சென்னை கே.கே. நகர் பிஎஸ்பிபி பள்ளியின் தாளாளர் ஷீலா ராஜேந்திரன், பெற்றோர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். 

“இந்த மாதிரியான புகார்கள் கடந்த காலங்களில் தங்களின் கவனத்திற்கு வரவில்லை” என்றும், அவர் கூறியுள்ளார். 

முக்கியமாக, “இந்த விவகாரம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தித் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், அந்தக் கடிதத்தில் அவர் உறுதிப்படத் தெரிவித்து உள்ளார்.