சென்னை கே.கே.நகர் தனியார் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சம்மந்தப்பட்ட பிஎஸ்பிபி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் 
தற்போது அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை கே.கே. நகரில் அமைந்துள்ள பிஎஸ்பிபி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

குறிப்பிட்ட இந்த ஆசிரியர் மட்டும், மாணவிகளிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்து கொண்டதாகத் தொடர்ந்து அடுத்தடுத்து புகார் எழுந்தது. இந்த புகாரை உறுதி செய்யும் வகையில், மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து வரும் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் திடீரென்று போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இது தொடர்பாக, முன்னாள் மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திற்குக் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர். அந்த கடிதத்தில், “சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொள்கிறார்” என்று, பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளனர். 

“அவர் பாலியல் ரீதியில் மாணவிகளை அணுகுகிறார் என்றும், அவரின் செயல்பாடுகள் மாணவிகளை மனதளவில் வேதனைக்கு உள்ளாக்குகிறது” என்றும், முன்னாள் மாணவர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

அத்துடன், “தற்போது அனைவருக்கும் இணையம் வழிக் கல்வி கற்பிக்கப்படுவதால், மாணவிகளின் தொலைப்பேசி எண்கள் அனைத்தும் அந்த ஆசிரியரிடத்தில் இருக்கிறது என்றும், இதனால், மாணவிகளின் தொலைப்பேசி எண்களுக்கு அந்த ஆசிரியர் மிக மோசமான குறுந்தகவல்கள் அனுப்புவதாகவும், அந்த ஆசிரியர் இப்படியே ஆபாசமாகச் செய்தி அனுப்புவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்” என்றும், மாணவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும், “காணொலி வழியாக ஆசிரியர் வெறும் துண்டு மட்டும் கட்டிக் கொண்டு அரை நிர்வாணமாக மாணவிகளுக்குப் பாடம் நடத்துவதாகவும்” மாணவிகள் பகிரங்கமாகப் புகார் தெரிவித்து உள்ளனர். 

இந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து மாணவிகள், தங்களை வெளிப்படுத்தக்கொள்ள விரும்பாத நிலையில், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இந்த பிரச்சினையை தற்போது வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து உள்ளனர்.

இது தொடர்பாகப் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டும், ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

முக்கியமாக, சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை, அந்த ஆசிரியர் பள்ளியின் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தக் கூடாது என்றும்,  முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

குறிப்பாக, இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த திமுக எம்.பி கனிமொழி, “மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள புகாரை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன்” என்று, தன்னுடைய டிவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்து, கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிஎஸ்பிபி ஆசிரியர் ராஜகோபலனை பிடித்துக் காவல் துறை துணை ஆணையர் ஜெயலட்சுமி விசாரணை நடத்தினார். 

அப்போது, பள்ளி வளாகத்தில் விசாரணை மேற்கொள்ள வந்த மாவட்ட குழந்தைகள் நல அமைப்பிற்கு, பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்து உள்ளது. அப்போது, பள்ளி நிர்வாகம் போதுமான ஒத்துழைப்பு தரவில்லை என்றும், காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போலீசாரின் இந்த விசாரணை நடைபெற்ற பிறகு, சம்மந்தப்பட்ட வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் தற்போது அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.