பாலியல் தொல்லை புகாரில் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.
 
சென்னை கே.கே. நகரில் செயல்பட்டு வரும் பிஎஸ்பிபி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன், அங்கு வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்து கொண்டதாகத் தொடர்ந்து அடுத்தடுத்து புகார் எழுந்தது. இந்த புகாரை உறுதி செய்யும் வகையில், மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து வரும் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் திடீரென்று போர்க்கொடி தூக்கி புகார் கடிதம் அளித்தனர்.

அந்த கடிதத்தில், “சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொள்கிறார் என்றும், அவர் பாலியல் ரீதியில் மாணவிகளை அணுகுகிறார் என்றும், அவரின் செயல்பாடுகள் மாணவிகளை மனதளவில் வேதனைக்கு உள்ளாக்குகிறது” என்றும், முன்னாள் மாணவர்கள் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி இருந்தனர்.

இதனைத்தொடர்ந்து, ராஜகோபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டது. 

அதன்படி சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா, தனியார் பள்ளி தாளாளர் மற்றும் பள்ளி முதல்வர் கீதா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். 

அதன் தொடர்ச்சியாகவே, பள்ளி நிர்வாகம், அறிக்கையை முதன்மை கல்வி அலுவலரிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையைப் பள்ளிக் கல்வி ஆணையருக்கு முதன்மை கல்வி அலுவலர் அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து கல்வி ஆணையர், தமிழக அரசிடம் அந்த அறிக்கையை சமர்ப்பித்ததாகக் கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

அதன் தொடர்ச்சியாக, இந்த பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீதான, பாலியல் குற்றச்சாட்டால், அவர் அதிரடியாக நேற்று இரவு கைது செய்யப்பட்டார். 

ஆசிரியர் ராஜகோபாலன் மீது, போக்சோ சட்டம் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டப் பிரிவின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனையடுத்து, பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பத்மசேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், “பத்மசேஷாத்ரி பால பவன் பள்ளியில் பல கருப்பு புள்ளிகள் உள்ளதாக, விசாரணையில் ஆசிரியர் ராஜாகோபாலன் மறைமுகமாகத் தெரிவித்து உள்ளதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
 
குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளாக இதே போன்று பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஆசிரியர் ராஜாகோபாலன் ஈடுபட்டு வந்து உள்ளதாகக் காவல் துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான விசாரணை தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கைதான ஆசிரியர் ராஜகோபாலனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.