சென்னை பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 2 பாலியல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இதனையடுத்து, பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலானை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, அசோக் நகர் மகளிர் போலீசார் திட்டமிட்டனர். 

இதில், முக்கியமாக ஆசிரியர் ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறை துணை ஆணையர் ஜெயலட்சுமியின் செல்போன் வாட்ஸ்ஆப் எண்ணிற்குத் தகவல்களை அனுப்பும்படி தமிழக காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன் படி, சுமார் 40 மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் வாட்ஸ்ஆப் மூலமாக, பல்வேறு குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்ட அந்த நம்பருக்குப் புகாராக அனுப்பி வைத்தனர். இந்த புகாரில், 15 மாணவிகள் தமிழகத்தின் பிற பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்கிற அதிர்ச்சித் தகவலும் நேற்றைய தினம் வெளியாகி பெரும் பரப்பை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை, தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவுக்குக் காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமி தான், கூறியிருக்கிறர்.

இந்த புகார்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், கைதான ஆசிரியர் ராஜகோபாலனுக்கு நெருங்கிய நண்பர்கள் யார் யார்? என்ற பட்டியலைத் தயாரித்து, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளவும் காவல் துறை திட்டமிட்டு உள்ளது. இதனால், ராஜகோபாலனுக்கு பள்ளி மற்றும் வீட்டில் நெருங்கிய நண்பர்கள் யார் என்கிற பட்டியல் தற்போது திரட்டப்பட்டு வருகிறது. 

இதனால், ஆசிரியர் ராஜகோபாலனின் செல்போனை சைபர் கிரைம் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த செல்போனில் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், அவரது முக்கிய நண்பர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தற்போது ஈடுபட்டு உள்ளனர்.

முக்கியமாக, “பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் உள்பட வேறு எந்த ஆசிரியரால் பாதிக்கப்பட்டிருந்தாலும், மாணவிகள் பயப்பிடாமல் புகார் அளிக்கலாம் என்றும், புகார் அளிக்கும் மாணவிகளுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், அவர்களது பெயர் ரகசியமாகப் பாதுகாக்கப்படும்” என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்ததின் காரணமாக, அவரால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட இரு பள்ளி மாணவிகள் ஆசிரியர் ராஜகோபாலன் மீது புகார் அளித்து உள்ளனர். 

ஆசிரியர் ராஜகோபாலன் மீது, புதிதாக இரு மாணவிகள் தற்போது புகார் அளித்து உள்ளதால், இச்சம்பவம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. 

இரண்டு மாணவிகளில் பாலியல் புகார்கள் தொடர்பாக, ஆதாரங்களைத் திரட்டும் பணியில் அசோக் நகர் மகளிர் போலீசார் தற்போது மிகத் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இதனிடையே, பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரமானது, தோண்ட தோண்ட புகார்கள் குவிந்து கொண்டிருப்பதால், இந்த வழக்கில் நாளுக்கு நாள் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.