மத்திய அரசின் ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தில் இணைந்த தமிழக அரசு, சமீபத்தில் இதற்கான பணிகளை தொடங்கியது. இத்திட்டத்தை முதல்வர் பழனிசாமி, அக்டோபர் 1 ம் தேதி தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்திருந்தார். அந்த நேரத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ``பொருட்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்படாத வகையில், 5 சதவீதம் பொருட்கள் கடைகளுக்கு கூடுதலாக ஒதுக்கப்படும்’’ என்றார். இத்திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், குடும்ப அட்டை உறுப்பினர் மட்டுமே இனி பொருட்கள் வாங்க முடியும். ஆனால், மலைப்பகுதிகள் உள்ளிட்ட சில இடங்களில் ‘4 ஜி’ நெட் ஒர்க் அடிப்படையில், விற்பனை முனைய இயந்திரம் செயல்படுவதில் சிக்கல் உள்ளதாகவும், வயதானவர்கள் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் உள்ளதாகவும் அந்த நேரத்திலேயே கூறப்பட்டது.

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில், பி.ஓ.எஸ்.,இயந்திரத்தின் மூலம் பொருட்கள் வழங்குவதில் பிரச்னை உள்ளதால், ரேஷன் கடை ஊழியர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் எந்த மாநிலத்தில் இருப்பவரும் வேறு மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுகொள்ளும் வசதி நியாயவிலை கடையில் உள்ள இயந்திரம் மூலம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் புதிய திட்டத்திற்காக நியாயவிலை கடைகளில் பயோமெட்ரிக் (கைவிரல் ரேகை பதிவு முறை) பயன்படுத்துவதற்கு ஏதுவாக புதிய இயந்திரம் தரப்படும் என்று அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் நடைமுறையில் பழைய பி.ஓ.எஸ் இயந்திரங்களை பெற்றுகொண்ட தாலுக்கா அளவிலான பொறியாளர்கள் அதையே சரி செய்து மென்பொருள் டவுன்லோடு செய்து கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவியையும் இணைத்து ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் வழங்கினர்.புதிய திட்டத்தின் மூலம் கடந்த 5ம் தேதி முதல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வழங்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக ரேஷன் கடைகளில் புதிய திட்டத்தின் படி, பயனாளிகள் இயந்திரத்தில் கைரேகை வைத்த போது, சரியாக வேலை செய்யாததால், எச்சரிக்கை என்ற வாசகம் வந்தது.

இதனால் ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு பொருட்கள் வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டது. மாவட்டத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கும் பணியை விற்பனையாளர்கள் நிறுத்தினர். பிரச்னை குறித்து, வட்டவழங்கல் அலுவலகம், தாலுக்கா பொறியாளர்கள் ஆகியோரிடம் புகார் அளித்தனர். பிரச்னை காரணமாக பலர் ரேஷன் கடையை மூடிவிட்டனர்.பிரச்னை குறித்து திண்டிவனத்திலுள்ள ரேஷன் கடை விற்பனையாளர்கள் தரப்பில் கேட்ட போது, '' நியாயவிலை கடைகளில் ஒரே நாடு-ஒரே ரேஷன் திட்டத்திற்கு புதியதாக செயலி வழங்காமல், பழைய இயந்திரத்தை பழுதுபார்த்து அதில் மென்பொருள் டவுன்லோடு செய்து கொடுத்தனர்.

இதனால் இயந்திரத்தை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே எங்களுக்கு பழைய இயந்திரங்களை மாற்றி புதிய இயந்திரங்கள் வழங்கினால் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தினை தடையில்லாமல் தொடர முடியும்'' என்று தெரிவிக்கின்றனர்.மாவட்டத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில் புதிய திட்டத்தின்படி பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நேற்று புதிய உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதன்படி ஏற்கனவே பயோ மெட்ரிக் முறையில் பிரச்னை இருந்ததால், குடும்ப உறுப்பினர்களின் அனைவரது கைரேகையும் ஆதார் கார்டில் இணைக்கப்பட்டுள்ளதால், ஆதார் மூலம் பயனாளிகளின் கைரேகையை கொண்டு பிரஸ் செய்தால், மொபைல்போனில் ஓ.டி.பி., எண் வரும். இந்த ஓ.டி.பி.,எண்ணை வைத்து, பொது மக்களுக்கு ரேஷன் பொருட்களை தடையில்லாமல் வழங்க வேண்டும் என்று அறிவுருத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு மூலம் தினந்தோறும் 400லிருந்து 500 கார்டுக்கு பொருட்கள் வழங்குவார்கள். தற்போது ஓ.டி.பி., முறையில் பொருட்கள் வழங்குவதற்கு நீண்ட நேரம் பிடிப்பதால் தினந்தோறும் நுாறு கார்டுக்கு கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, விற்பனயாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.