“கருணாநிதி படத்தைக் குடியரசுத் தலைவர் திறந்து வைத்ததை முதல்வராக மகிழ்கிறேன், மகனாக நெகிழ்கிறேன்” என்று, மு.க.ஸ்டாலின் நெக்குருகிப் பேசியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா மற்றும் தமிழக சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று வருகிறார். இந்த விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்று வருகின்றனர்.

இவர்களுடன், தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களான வைகோ, கி வீரமணி, திருமாவளவன், கே.எஸ் அழகிரி, கோபாலகிருஷ்ணன், முத்தரசன், ஜி.கே. வாசன் உள்ளிட்ட தமிழகத்தின் முகி முக்கியமான அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டு வருகின்றனர். 

தமிழ்த் தாய் வாழ்த்துடன் விழா தொடங்கிய நிலையில், சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு வரவேற்புரை வழங்கினார்.

அப்போது, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். 

அதன் தொடர்ச்சியாக, தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதியின் புகைப்படத்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். 

அதன் படி, கலைஞரின் உருவப்படத்தின் கீழே “காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது” என்ற வாசகங்கள் அந்த படத்தில் இடம் பெற்றிருந்தது. 

தமிழக சட்டப்பேரவையில் 16 வது தலைவராகக் கருணாநிதியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது, அனைத்து தரப்பினரையும் கவனிக்க வைத்துள்ளது.

கருணாநிதியின் உருப்படத்தை திறந்து வைத்த பிறகு உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “ வணக்கம்” என்று, தமிழில் பேசி தனது உரையைத் தொடங்கினார்.

அதன் படி, “இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் உருவப்படத்தை திறந்துவைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்” என்று, அவர் தமிழில் பேசி அசத்தினார். 

“தமிழ்நாட்டு மக்களுக்காகத் தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்றும், தமிழ் இலக்கியம், சினிமாவுக்காகவும் பெரும் பங்காற்றியவர் கருணாநிதி” என்றும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாராம் சூட்டினார்.

“அறியாமைக்கும், ஏழ்மைக்கும் எதிராக குரல் கொடுத்தவர் கருணாநிதி என்றும், மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியவர் கருணாநிதி” என்றும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுட்டிக்காட்டிப் பேசினார்.

அதே போல் விழாவில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், “அனைவருக்கும் மாலை வணக்கம்” என்று, தமிழில் பேசத் தொடங்கினார்.

“இந்திய அரசியல்வாதிகளில் குறிப்பிடத்தக்கத் தனித்துவம் மிகுந்தவர் கருணாநிதி என்றும், அனைத்து துறைகளிலும் அறிவு மிகுந்தவராக திகழ்ந்தார்” என்றும் குறிப்பிட்டுப் பேசினார்.

“தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு மிகச் சிறந்த வரலாறு உள்ளது என்றும், இந்தியாவில் முன்னேறிய மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது” என்றும், பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இறுதியாக “நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த், ஜெய் தமிழ்நாடு” எனக் கூறி, தனது உரையை நிறைவு செய்தார்.

கடைசியாகப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வாழ்நாளில் அரை நூற்றாண்டுக்கு மேலாக சட்டமன்றத்தில் இருந்த மாபெரும் தலைவர் கலைஞர் கருணாநிதியின் உருவப்படம் சட்டப்பேரவையில் திறக்கப்பட்டுவிட்டது” என்றும், அவர் புகழாரம் சூட்டினார்.

மேலும், “தமிழக முதல்வராக 5 முறையும், சட்டமன்ற உறுப்பினராக 13 முறையும் இருந்தவர் கருணாநிதி என்றும், சீர்திருத்த சட்டங்களை இயற்றி தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்” என்றும், அவர் மேற்கொள் காட்டி பேினார்.

குறிப்பாக, “முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர், எம்எல்ஏ என பல பதவிகளை வகித்தவர் என்றும், தமிழக மக்களைக் காந்தக் குரலால் கட்டிப்போட்டு வைத்தவர் கருணாநிதி” என்றும், அவர் புகழாரம் சூட்டினார். 

முக்கியமாக, “கலைஞர் கருணாநிதி உருவப்படத்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், திறந்து வைத்ததைக் கண்டு நெகிழ்கிறேன்” என்று, நெக்குருகிப் பேசினார்.