“சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்று, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பக்கம் கூறியுள்ள நிலையில், மற்றொரு பக்கம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா பேசிய ஆடியோ தான், அந்த கட்சியின் சமீபத்திய ஹாட் டாப்பிகாக இருக்கிறது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களிடையே சசிகலா பேசும் ஆடியோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி, அந்த கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. இதனால், அதிமுகவை மீண்டும் சசிகலா கைப்பற்றப் போகிறரா? என்கிற கேள்வியும் பரப்பலாக எழுந்து உள்ளது.

குறிப்பாக, தற்போது வெளியாகி உள்ள புதிய ஆடியோவில், “கட்சியைத் தலைமையேற்று வழி நடத்த நிச்சயம் வருவேன், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை” என்று, அதிமுக பிரமுகரிடம் சசிகலா பேசிய ஆடியோ தற்போது வெளியாகி அதிமுகவில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இது ஒரு புறம் இருக்க, அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் வரும் 14 ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இதற்காக, அனுமதி வழங்கக்கோரி அதிமுக சார்பில் சென்னை டிஜீபி அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 

அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் கொரடாவைத் தேர்ந்தெடுக்க இந்தக் கூட்டம் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தித்து பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “சசிகலா இல்லாமலே அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்று, பேசினார். 

அத்துடன். “நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசம் இல்லை என்றும், மக்கள் அதிமுகவின் தலைமையை ஏற்றுக்கொண்டதற்கான சான்று தான் இது” என்றும், அவர் குறிப்பிட்டார். 

குறிப்பாக, “அதிமுகவுக்கு புதிய பொதுச் செயலாளர் தேவையில்லை என்றும். ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இருவருமே அதிமுகவை வழி நடத்துவார்கள்” என்றும், ஜெயக்குமார் தெரிவித்தார்.

மற்றொரு புறம், “ஓ.பன்னீர் செல்வத்தைக் கலந்து ஆலோசிக்காமல் செயல்பட்டால், அதிமுக அலுவலகத்தை முற்றுகையிடுவோம்” என்று, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். இது, அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, திருநெல்வேலியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக சார்பிலேயே போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. 

அந்தப் போஸ்டரில், “அதிமுக கட்சி செயல்பாடுகளில் அம்மாவால் அடையாளம் காணப்பட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை கலந்து ஆலோசிக்காமல். எந்த விதமான செயல்பாடுகளோ, நடவடிக்கைகளோ செய்யாதே.. அவ்வாறு செய்ததால் தான் தேர்தலில் தேற்றுப்பேனாம். இனிமேலும் தொடர்ந்தால், கட்சித் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவோம்” என்று, அந்த போஸ்டரில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த போஸ்டர் விவகாரம், அதிமுகவில் மட்டுமல்லாது, தமிழக அரசியல் ஒரு குழப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இப்படியாக, அதிமுகவில் சமீப காலமாக சசிகலா வருகை, எடப்பாடி பழனிசாமியின் ஆளுமை, ஓ.பன்னீர் செல்வத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமை” என, அக்கட்சிக்குள் மும்முனை பிரச்சனை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.