15 வயது சிறுமியை கடத்தி கூட்டுப் பாலியல் தொந்தரவு செய்த பொள்ளாச்சி இளைஞர்கள் 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான வழக்கு தற்போது வரை நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை 
வழக்கின் பீதி இன்னும் மக்கள் மனதை விட்டு நீங்காத நிலையில், அதே பகுதியில் மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருவது என்பது வேதனையாக உள்ள நிலையில், இது போன்ற சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்து உள்ள ஆனைமலை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார். இந்த மாணவி, தற்போது கொரோனா தாக்கம் காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், பெற்றோருடன் தனது வீட்டில் தங்கிச் சிறு சிறு பணிகளைச் செய்து வந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 14 ஆம் தேதி முதல், அந்த 15 வயது சிறுமி திடீரென்று மாயமானார். இதனால், பதறிப்போன சிறுமியின் பெற்றோர், அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்து உள்ளனர். எங்குத் தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில், இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், மாயமான சிறுமியை போலீசார் தீவிரமாகத் தேடிக் கண்டுபிடித்த நிலையில், அவரை பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து, மீட்கப்பட்ட அந்த சிறுமியிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அந்த சிறுமியை அதே பகுதியைச் சேர்ந் 3 பேர் கடத்திச் சென்று, பாலியல் தொந்தரவு செய்ததாக அவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார். 

இதனையடுத்து, அந்த 3 பேர் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், உடனடியாக இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த ஹரி குமார், பிரவீன் குமார், சபரிராஜன் என்கிற சூர்யா ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 

தற்போது, அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே, கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், சென்னை வியாசர்பாடி அருகே காவல் துறையினர் போல் நாடகமாடி, தொழிலதிபரைக் கடத்திச் சென்ற கும்பல் ஒன்று, அவரிடமிருந்து 2.5 லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.