தூத்துக்குடியில் காவலர் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்த ரவுடி துரைமுத்து என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஸ்ரீ வைகுண்டத்தை சேர்ந்த ரவுடி துரை முத்து மீது ஏற்கனவே 2 கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், போலீசார் அவரை தேடி வந்தனர். 

இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையர்கள் மணல் திருடுவதாகப் புகார் வந்தது. அத்துடன், யாரையோ கொலை செய்ய ரவுடி துரைமுத்து ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்ததாக, போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், ரவுடி துரை முத்துவை பிடிக்க போலீசார் சென்றுள்ளனர். 

அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மனக்கரை வனப்பகுதியில் போலீசாரை கண்ட ரவுடி துரை முத்து, அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். ஆனால், காவலர் சுப்பிரமணியம் மட்டும் ரவுடியை துரத்திச் சென்றதாகத் தெரிகிறது. இதனால், ரவுடி அங்கிருந்து தப்பிச் செல்லும் விதமாகக் காவலர் சுப்பிரமணியம் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தி உள்ளார். 

இதில், படுகாயம் அடைந்து சுருண்டு விழுந்த காவலர் சுப்பிரமணியம், நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து, அங்கு விரைந்து சக போலீசார், உயிரிழந்த காவலர் சுப்பிரமணியம் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், வெடிகுண்டு வீசிய துரைமுத்து படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

மேலும், இது தொடர்பாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, “ தூத்துக்குடி அருகே நாட்டு வெடிகுண்டு வீசி காவலர் கொலை செய்யப்பட்டது குறித்து, விசாரணைக்கு பிறகே முழு விவரங்களும் தெரிய வரும்” என்று சுருக்கமாகக் கூறினார்.  

ஆனால், அடுத்த சில நிமிடங்களில், காவலர் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்த ரவுடி துரை முத்துவை, போலீசா்ர என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகத் தகவல்கள் வெளியானது.

அத்துடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவுடி துரை முத்து, அங்கிருந்து தப்பி ஓட முயன்றதாகவும், இதனால் போலீசார் தரப்பில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனால், ரவுடி துரை முத்து உயிரிழந்தது தொடர்பாக இருவேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

தற்போது, உயிரிழந்த ரவுடி துரை முத்துவின் உடலானது, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு, மருத்துவ பரிசோதனைகள் முடிந்து, பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் வெளியானால் மட்டுமே உண்மை நிலவரம் என்ன என்பது தெரிய வரும்.

இதனிடையே, தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே நாட்டு வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் காவலர் ஒருவர் உயிரிழந்ததும், அடுத்த சில நிமிடங்களில், காவலரை கொன்ற ரவுடி கொல்லப்பட்ட சம்பவமும், அடுத்தடுத்து அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.