லடாக் பகுதிக்கு இன்று காலை சென்ற பிரதமர் மோடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக் பகுதியில், கடந்த மாதம் 15 ஆம் தேதி சீன ராணுவத்துடனான மோதலின் போது, இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து, லடாக் எல்லை நிலவரம் குறித்தும், ராணுவ நடவடிக்கைகள் குறித்தும் பாதுகாப்புப் படைகளின் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தப்பட்டு, அங்குப் படைகள் குவிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இந்திய எல்லைப் பகுதியில் போர் விமானங்களை விமானப்படை தயார் நிலையில் நிறுத்தி வைத்து வருகிறது. 

குறிப்பாக, இந்திய விமானப் படையின் சுகோய் 30 எம்.கே.ஐ., மிராஜ் 2000, ஜாக்குவார் போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. பின்னர், முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத்துடன், பிரதமர் மோடி லே பகுதிக்குச் சென்று நிலைமையை நேரில் ஆய்வு செய்தார். 

மேலும், லடாக்கின் கிழக்குப் பகுதியில் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், அமெரிக்க அபாச்சே வகை ஹெலிகாப்டர்கள் மிக அருகிலேயே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எந்த நேரத்திலும் தாக்குதலுக்குத் தயாராக இருக்கும் வகையில் அவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.  

அதேபோல், இந்தியா தனது விமானப் படையைக் குவிக்கும் முன்பே, லடாக்கின் கிழக்குப் பகுதியில் 10 ஆயிரம் ராணுவ வீரர்களைச் சீனா குவித்து வைத்துள்ளது. 

இதனால், சீன விமானப்படையினர் ஹோட்டன், கர் குன்சா பகுதிகளிலிருந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக, லடாக் மற்றும் திபெத் பிராந்தியத்தை சுற்றியுள்ள லே, ஸ்ரீநகர், அவந்திபூர், பரேலி, ஆதம்பூர், ஹல்வாரா, அம்பாலா, சிர்சா என பல்வேறு தளங்களிலிருந்து இந்திய விமானப்படையால் பதிலடி கொடுக்க முடியும் என்றும், இந்த குறிப்பிட்ட இடங்களில் இந்திய விமானப் படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தொடர்ந்து வெளியானது. 

இதனால், இந்திய எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டு வருகின்றன. அத்துடன், சீனாவுக்கு எதிரான போருக்கு இந்தியா தயாராகி விட்டதாகவே தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. 

இந்த பதற்றத்தைத் தணிக்கும் விதமாக, இந்தியா - சீனா இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து பேச்சு வார்த்தையைத் நடைபெற்றாலும், மறு புறம் காஷ்மீர் மற்றும் லடாக் எல்லை வரை இரு நாட்டுப் படைகளும், ஆயுதங்களைத் தொடர்ந்து குவித்து வருவதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக, இந்திய - சீன இடையேயான எல்லையில் நடைபெற்று வரும் மோதல் போக்கானது, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே நீடித்து வருகிறது. 

இப்படிப்பட்ட சூழலில், பாதுகாப்பு துரை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே ஆகியோர், லே பகுதியில் இன்று ஆய்வு மேற்கொள்ள இருந்தனர். ஆனால், அது நேற்று மாலை திடீரென்று ஒத்தி வைக்கப் பட்டது. இப்படி பதற்றமும், சீனாவுடன் மோதல் போக்கு வலுத்து வரும் இந்த சூழல் நிலையில், லடாக் எல்லைப் பகுதியில் பிரதமர் மோடி, இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

முக்கியமாக ராணுவ பாதுகாப்பு, வான்வெளி பாதுகாப்பு ஆகியவற்றை ஹெலிகாப்டர் மூலமாகப் பிரதமர் மோடி ஆய்வு செய்தார். அப்போது, பிரதமர் மோடியுடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தும் உடன் இருந்தார். இதனையடுத்து, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். 

அந்த ஆலோசனையின் போது, “இந்திய - சீன எல்லையில் உள்ள பாங்காங் டிஸோ ஏரிக்கு ஆயுதங்கள் நிரப்பப்பட்ட அதிவேக இடை மறித்துத் தாக்கும் படகுகளை அனுப்புவது” குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், லடாக் எல்லையில் சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலின் போது காயம் அடைந்த வீரர்களைப் பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருவதாகவும் செய்திகள் வெளியானது.

முன்னறிவிப்பின்றி அதிரடி ஆய்வில் ஈடுபட்டார் பிரதமர் நரேந்திர மோடி, இங்கு உள்ள சூழலை ஆய்வு செய்து, நம் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.  

இதனிடையே, பிரதமர் மோடியின் திடீர் லடாக் ஆய்வு, இந்திய - சீன எல்லையில் பதற்றத்தையும், பரபரப்பையும் மீண்டும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.