“பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாகப் பின்பற்றவில்லை” - பிரதமர் மோடி கவலை
By Aruvi | Galatta | Jun 30, 2020, 04:00 pm
“நாடு முழுவதும் பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாகப் பின்பற்ற வில்லை” என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் தொற்ற பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் முழு பொது முடக்கம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முதலில் 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், தற்போது 6 வது முறையாக ஜூலை 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தொடர்பாக 6 வது முறையாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று உரை ஆற்றினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “பொது முடக்கத்தின் 2 ஆம் கட்டமான UNLOCK 2.0 தொடங்கி விட்டது” என்று குறிப்பிட்டார்.
“கொரோனாவை எதிர்த்துப் போராடும் தற்போதைய சூழலில், பருவ மழைக்காலம் தொடங்கி விட்டதாகவும், இந்த காலத்தில் காய்ச்சல், சளி உள்ளிட்டவை வரும் என்பதால், மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்” என்றும் பிரதமர் மோடி வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
“சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்ட கொரோனா முழு முடக்கத்தால், இந்தியாவில் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும்” பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
“நாட்டில் ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக் கூடாது என்றும், பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது நாடு கொரோனாவை சிறப்பாக எதிர் கொண்டுள்ளது” என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மேலும், “ பொது முடக்கத்தை மக்கள் பல இடங்களில் சரியாக பின் பற்றவில்லை என்று கவலைத் தெரிவித்த பிரதமர் மோடி, இப்போது செய்யக் கூடிய சிறிய தவறுகள் நாளை மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடலாம்” என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
குறிப்பாக, “ பிரதமர் முதல் சாமானியர் வரை, நமது நாட்டில் ஒரே விதி முறை தான் பின்பற்றப்பட்டு வருகிறது என்றும், ஊராட்சி தலைவரோ, பிரதமரோ விதி முறைகளைக் கடைப்பிடித்தாக வேண்டும்” என்றும் மோடி கூறினார்.
“நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஊரடங்கின் போது விதி முறைகளைக் கண்டிப்பாக அனைவரும் கடைப் பிடிக்கப்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
“ ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட போதிலும், மக்கள் தொடர்ந்து அஜாக்கிரதையாகச் செயல்பட்டு வருகின்றனர் என்றும், பொறுப்பற்ற நடவடிக்கை நிச்சயம் கவலை அளிக்கக் கூடியது” என்றும், பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
“விதிமுறைகள் சட்டங்கள் என்பது அனைவருக்கும் பொதுவானது என்றும், அதனால் அவசியம் அனைவரும் அதைப் பின் பற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
“ இப்போது நாம் செய்யக் கூடிய சிறிய தவற்றுக்குக் கூட மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேரிடலாம் என்றும், அனைவரும் சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டும் என்றும், பிரதமர் முதல் சாமானியர் வரை அனைவருக்கும் நமது நாட்டிலும் ஒரே விதி முறைதான்” என்றும் மீண்டும் குறிப்பிட்டார்.
அதேபோல், “இந்தியா முழுவதும் 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ கோதுமை வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, 18 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்றும் சுட்டிக்காட்டினார்.
“ 80 கோடி மக்களுக்கு இலவச ரேசன் பொருள்கள் வழங்கும் திட்டம் மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டும் என்றும், இதனால் அரிசி, கோதுமையுடன் ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.
“இலவச பொருட்களுக்காக அரசுக்குக் கூடுதலாக 90 ஆயிரம் கோடி செலவாகும் என்று சுட்டிக்காட்டிய பிரதமர், நாட்டின் பொருளாதார சூழலை மேம்படுத்தத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறினார்.
“விவசாயிகள் மற்றும் நேர்மையாக வரி செலுத்துவோரின் காரணமாகவே, அரசின் இந்த முயற்சி சாத்தியமாகிறது என்றும், அவர்களுக்கு எனது நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றும் அவர் பேசினார்.
“கிராமப் புறங்களில், வளர்ச்சியை ஏற்படுத்த 50,000 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டங்களைச் செயல் படுத்தி வருகிறோம் என்றும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கல்யாண் யோஜனா திட்டம் தொடங்கப் பட்டுள்ளது” என்றும் பிரதமர் தெரிவித்தார்.
“ நாட்டின் ஏழை மக்கள் ஒருவரும் பசியுடன் உறங்கக் கூடாது என்பதற்காக மத்திய மாநில - அரசுகள், அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் தங்கள் முழு முயற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டிய பிரதமர், 20 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகளில் சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது” என்றும் மேற்கொள் காட்டினார்.
“மத்திய அரசின் இதுபோன்ற நலத் திட்டங்களால், அமெரிக்காவை விட இந்தியாவில் 2 மடங்கு மக்கள் அதிக பலன் அடைந்துள்ளனர் என்றும், உலகின் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது இந்தியா நிலையாகவே உள்ளது” என்றும் பிரதமர் தெரிவித்தார்.
“வேளாண் துறையிலும் வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர், கொரோனா தடுப்பு நடவடிக்கை காலத்தில் பொருளாதார மேம்பாடு அவசியம்” என்றும் கூறினார்.
முக்கியமாக, “ தற்சார்பு பாரத திட்டத்தைச் செயல் படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்றும், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம்” என்றும் நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி அறை கூவல் விடுத்தார்.