பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜின்பிங் இடையேயான வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு 2வது நாளாக நடைபெற்று வருகிறது. 

சென்னை மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜின்பிங் இடையேயான வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு நேற்று முதல் நாள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து கம்பீரமாகக் காட்சி அளித்தார்.

PM Narendra Modi China President

வேட்டி, சட்டை, தோழில் துண்டு அணிந்த படி பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கை கை குலுக்கியபடி, உற்சாகமாக வரவேற்றார். இதனையடுத்து, கடற்கரை கோயிலின் சிறப்புகளைச் சீன அதிபருக்கு விளக்கும் வகையில், ஜின்பிங் உடன், மோடி கோயிலைச் சுற்றி வலம் வந்தார். 

PM Narendra Modi China President

அப்போது, வெண்ணெய் உருண்டை கல் முன்பு நின்றாவரு பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் இணைந்து  புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும், இருவரும் தங்களது கைகளை உயர்த்தியபடி உற்சாகமாக புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து நின்றனர். 

பின்னர், கோயிலில் உள்ள பல்லவர் கால சிற்பக்கலை குறித்தும், பல்லவ மன்னர்கள் குறித்தும், சீன அதிபருக்கு மோடி விளக்கினார். இதன் இடையே, இரு நாட்டுத் தலைவர்களும் தமிழர்களின் இயற்கை பானமான இளநீர் பருகினார்கள்.

பின்னர், நரேந்திர மோடி - ஜின்பிங் இடையேயான வரலாற்றுச் சிறப்பு மிக்க பேச்சுவார்த்தை, குண்டு துளைக்காத கண்ணாடி அறைக்குள் சுமார் 2 மணி நேரமாக நடைபெற்றது. 

PM Narendra Modi China President

அதனைத்தொடர்ந்து, மாமல்லபுரம் கடற்கரை கோயிலில்  நடைபெற்ற பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை இருநாட்டுத் தலைவர்களும் கண்டு ரசித்தனர். குறிப்பாக, ராமாயண காவியம் நடன வடிவில் நிகழ்த்தப்பட்டது. அப்போது, இரவு நேரம் என்பதால், மாமல்லபுரம் கடற்கரை கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மிக அழகாகக் காட்சி அளித்தது. 

Mahabalipuram

இதனிடையே, இன்று 2வது நாளாகப் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் இடையேயான சந்திப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில், இரு நாட்டு உறவுகள், எல்லைப் பிரச்சனைகள், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு குறித்துப் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையானது மாமல்லபுரத்தில் உள்ள குண்டு துளைக்காத கண்ணாடி அறைக்குள் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.