பெட்ரோல் மற்றும்  டீசல் அதிரடி விலை குறைப்பு மத்திய அரசு அறிவிப்பு 

மத்திய அரசின் வரி குறைப்பு அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியைக் குறைத்துள்ளன


வரியை அதிரடியாக குறைக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளது பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுத் தந்திருக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வந்தாலும், இந்தியாவில் எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை மத்திய அரசு குறைத்து இருப்பது, பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகை பரிசாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் மீது 5 ரூபாயும், ஒரு லிட்டர் டீசல் மீது 10 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால், டீசல் விலை மீண்டும் 100 ரூபாய்க்கு கீழ் குறைந்தது. சென்னையில் நேற்று 106.76 ரூபாயாக இருந்த பெட்ரோல் விலை இன்று 101.40 ரூபாயாக குறைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து  டீசல் விலை லிட்டருக்கு 102.69 ரூபாயாக இருந்தது, 11 ரூபாய் அளவுக்கு குறைந்து 91.43 ரூபாயாக குறைந்திருக்கிறது.


கர்நாடக அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை 7 ரூபாய் குறைத்திருப்பதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்திருக்கிறார். பொதுமக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். விலை குறைப்பு இன்று மாலை முதல் அமலுக்கு வருகிறது.

புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் 85 காசுகளும், டீசல் விலை 19 ரூபாயும் குறைந்துள்ளது. உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தலா 12 ரூபாய் குறைக்கப்படுவதாக அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன. மத்தியப் பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி 4 சதவீதம் குறைக்கப்படுவதாக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் அறிவித்துள்ளார்.

அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 15 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் பெட்ரோல் விலை 8 ரூபாய் 20 காசுகளும், டீசல் விலை 13 ரூபாய் 90 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலியப் பொருட்கள் மீதான மதிப்புக்கூட்டு வரியை குறைக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறுவுறுத்தி இருந்தது. அதனை ஏற்று, பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநிலங்களில் மதிப்புக்கூட்டு வரி அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.