துணை நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் தற்போது தலைமறைவாக இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த வாரம் பிரபல சினிமா நடிகை சாந்தினி, பரபரப்பான புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், “அதிமுக முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன், கடந்த 5 ஆண்டுகளாக என்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, 3 முறை கட்டாய கருக்கலைப்பு செய்து, என்னை மோசடியாக ஏமாற்றி உள்ளதாக” பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

அத்துடன், “நான் சார்ந்த அந்தரங்க புகைப்படங்களை எனக்குத் தெரியாமல் எடுத்து, எனக்கே மிரட்டல் விடுத்ததாகவும்” அடுக்கான குற்றச்சாட்டுக்களை, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராகப் பிரபல நடிகை சாந்தினி புகார் அளித்தார். 

இந்த புகாரின் படி, சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இப்படியான நிலையில், பிரபல நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல் துறையினர் திட்டமிட்ட இருந்த நிலையில், அவர் தற்போது வரை தலைமறைவாக உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், துணை நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரால் தலைமறைவாகியிருக்கும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் குறித்த ஆதாரங்களைத் திரட்டுவதற்காக, சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் தற்போது ராமநாதபுரம் விரைந்து உள்ளனர். அத்துடன், தலைமறைவாக உள்ள மணிகண்டன் சென்னையில் தான் பதிங்கி இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளார்.

அந்த மனுவில், “திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறும் புகார்தாரர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் இந்த புகாரை அளித்து உள்ளதாகவும், தனக்கு எதிராக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். 

“தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் இந்த புகாரை அவர் அளித்து உள்ளதாகவும், சமுதாயத்தில் பிரபலமானவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலாக நடிகை செயல்பட்டு வருவதாகவும், மலேஷியாவில் இது போல பலரை அவர் மோசடி செய்து உள்ளதாக புகார்கள் உள்ளன” என்றும், தனது மனுவில் மணிகண்டன் கூறியுள்ளார்.

“நடிகையை கருக்கலைப்பு செய்யும்படி நான் ஒருபோதும் மிரட்டவில்லை என்றும், அவராகவே கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும்” அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

“சினிமா வாய்ப்பு இல்லாததாலும், பெற்றோரின் மருத்துவ சிகிச்சைக்காகவும் உதவி கேட்டதால், பரணி என்பவர் மூலம் 5 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், அதை பரணி திருப்பி கேட்டது முதல் தன்னை பிளாக்மெயில் செய்ய துவங்கியதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்” தன்னுடைய ஜாமீன் மனுவில் தெரிவித்து உள்ளார்.

அத்துடன், “நடிகை சாந்தினியை மிரட்டவில்லை என்றும், ஆரம்பகட்ட விசாரணை ஏதும் மேற்கொள்ளாமல், தனக்கு எதிராக அவசர அவசரமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும்” அவர் தனது மனுவில் கவலையுடன் கூறியுள்ளார்.

இந்த மனுவானது, விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.