திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இந்தச் சமத்துவபுரத்தின் நுழைவு வாயிலில் பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பெரியார் சிலைக்கு சமூக விரோதிகள் காவிச் சாயம் பூசி, காலணி மாலை அணிவித்திருப்பது இன்று (செப். 27) காலை தெரியவந்தது. இதனால், அப்பகுதியில் இன்று பதற்றமான சூழல் நிலவியது. தகவலறிந்து இனாம்குளத்தூர் மணிகண்டம் காவல் துறையினர் விரைந்து வந்து காலணி மாலையை அகற்றியதுடன், காவிச் சாயத்தைத் துடைத்து, சிலையைத் தூய்மைப்படுத்தினர்.

இந்தத் தகவல் பரவியதையடுத்து, சமத்துவபுர குடியிருப்புவாசிகள் மற்றும் திராவிடர் கழகம், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். மேலும், பெரியார் சிலையை அவமரியாதை செய்தவர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழித்தடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். உண்மையான குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டுவர் என்று காவல் துறையினர் சமாதானம் செய்து, மறியலைக் கைவிடச் செய்தனர்.

இந்நிலையில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள  பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது, 
 
``பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தை  தெரிவித்துக்கொள்கிறேன். ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மக்களிடமிருந்து பறக்கணிக்கப்படுவோம் என்பதை உணர்வார்களா?. பெரியார் ஒரு இயக்கத்தின் தலைவர் அல்ல, தமிழ் இயக்கத்தின் தலைவர். பெரியாரை அவமதிப்பதாக நினைத்து செய்பவர்கள் தங்களை தாங்களே அவமரியாதை செய்துகொள்கிறார்கள்"

பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன் ட்விட்டர் பக்கத்தில், "சமூக நீதிக்காக பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவர் தந்தை பெரியாரின் சிலையைத் திருச்சியில் மர்ம நபர்கள் அவமரியாதை செய்திருக்கும் செயலுக்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்குற்றச் செயலில் ஈடுபட்ட சமுக விரோதிகள் மீது தமிழக அரசு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :

``திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை இழிவுபடுத்தும் நோக்கோடு நேற்று நள்ளிரவு சமூக விரோதிகள் காவிச் சாயம் பூசி, காலணி மாலை அணிவித்துள்ளனர். சமூக விரோதக் கும்பல்களின் இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தின் பல பகுதிகளில் திருவள்ளுவர், அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு காவிச் சாயம் பூசுவது, சேதப்படுத்துவது, இழிவுபடுத்துவது போன்ற செயல்களில் மதவெறி சக்திகளும், இந்துத்துவ வெறியர்களும் தங்களது அரசியல் லாபத்திற்காக அவர்களது தலைவர்களின் ஆசியுடன் செய்து வருகின்றனர். இதன் மூலம் தமிழகத்தில் காலூன்ற முடியும் என்ற அவர்களின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

பெரியார் சிலையை அவமதிக்கும் வகையில் இழிவுபடுத்திய சமூகவிரோதிகளை உடனடியாக கைது செய்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிட  வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது"

சிலை அவமதிப்பு மற்றும் அதன் தொடர்ச்சியான மக்கள் போராட்டம் ஆகியவற்றை தொடர்ந்து மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஜெயராம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளைக் காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே, பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்ட தகவலறிந்து திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, இனாம்குளத்தூர் வந்து பெரியார் சிலையைப் பார்வையிட்டார்.

தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "பெரியார் சிலையை அவமரியாதை செய்வதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைக்கின்றனர். இதுபோன்ற நபர்கள் மீது காவல் துறையினர் தொடக்கத்திலேயே நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்திருக்காது. இவர்கள் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். நடவடிக்கை எடுத்தால் மேலே உள்ளவர்கள் தங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று அஞ்சுகின்றனர்" என்று கே.என்.நேரு தெரிவித்தார்.