ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாகச் சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பரோல் மனுவை நிராகரித்துவிட்டதாகத் தமிழக அரசும், சிறைத்துறையும் தெரிவித்தன. இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அற்புதம்மாள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், ``பேரறிவாளனின் தாய், தந்தை இருவரும் வயதானோர் என்பதாலும், அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. தமிழக அரசு 7 பேரையும் விடுவிக்கப் பரிந்துரைத்த நிலையில், ராஜீவ்காந்தி கொலையில் சர்வதேச தொடர்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பன்னோக்கு விசாரணை முகமையைக் காரணம் காட்டி, அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிறை விதிகளில் விலக்களித்து பேரறிவாளனுக்கு பரோல் வழங்க உத்தரவிட வேண்டும். விடுதலை செய்ய முடிவெடுத்த அரசு, பரோல் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கிறது. விடுதலை செய்ய முடிவெடுத்ததும், விடுப்பு மறுப்பதும் ஒரே கட்சியின் தலைமையிலான அரசுதான்" என வழக்கறிஞர் சண்முகசுந்தரம் சுட்டிக்காட்டினார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ``பரோல் விண்ணப்பங்கள் மீது இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் எனச் சட்டத் திருத்தம் கொண்டு வரும்படி ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? மேலும், பரோல் கோரிய விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்க, ஆலோசனைகள் வழங்க, சிறைத்துறையில் சட்ட ஆலோசகரை ஏன் நியமிக்கக் கூடாது?" என அரசுத் தரப்பிடம் கேள்விகள்  எழுப்பினர்.

இதுகுறித்து அரசிடம் விளக்கம் கேட்க வேண்டியுள்ளதாகவும், அரசுத் தலைமை குற்றவியல் வழக்கறிஞரிடம் தெரிவிப்பதாகவும், அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பின் பதில் மனுவில், பேரறிவாளன் பரோல் வழக்கைப் பொறுத்தவரை, அவரது உடல்நிலை முழுமையாக, புழல் மருத்துவமனையிலேயே தினசரி கவனிக்கப்படுகிறது.  அவரது உடல் நிலை,  எவ்விதக் குறைபாடும் இல்லாமல், சீரான நிலையில் உள்ளது. அனைத்து சிறைவாசிகளுக்கும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாகப் பின்பற்றப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விடுதலை செய்யத் தீர்மானம் நிறைவேற்றினாலும், சிறையில் இருக்கும் வரை சிறை விதிகளைக் கடைபிடிக்க வேண்டும்.  கரோனா தொற்று காலத்தில் சிறையில் இருப்பதே பாதுகாப்பானது. கடந்த முறை பேரறிவாளனுக்கு வழங்கிய பரோல், கடந்த ஜனவரி மாதம்தான் முடிந்தது.  இரண்டு ஆண்டுகளுக்கு பிறகே,  மறுபடியும் பரோல் கேட்க முடியும் என என அரசு வழக்கறிஞர் பிரதாப்குமார் வாதிட்டார்.

அமைச்சரவை மாறியிருந்தாலும், முடிவெடுத்த அரசுகள் ஒன்றுதான் என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த வழக்கின் மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்

இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் சிறையில் இருப்பதே பாதுகாப்பானது என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்ட போதும், சென்னை உயர்நீதிமன்றம் பரோல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.