“கிளைக் கழகங்களை கட்டமைக்காமல் 50 கோடி ரூபாய் செலவு செய்தாலும், அதிமுகவால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது” என்று, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக பேசி உள்ளது அதிமுக உயர்மட்ட தலைவர்கள் இடையே பெரும் பரபர்பபை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவின் விழுப்புரம் மாவட்ட அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் சிவி. சண்முகம், ஓ.எஸ்.மணியன், ஜீவானந்தம் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அப்போது, அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், “அமைப்பு தேர்தலில் கிளைக் கழகச் செயலாளர்களை ஒன்றிணைந்து செயல்பட்டு ஒரு மனதாக தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று, கேட்டுக்கொண்டார். 

அத்துடன், “நீங்கள் பஞ்சாயத்து பேசி கால நேரத்தை வீணாக்காமல், நிர்வாகிகளை சரியாக தேர்தெடுக்க வேண்டும்” என்றும், அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும், “காலியாக உள்ள இடங்களை புதிதாக உள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், இன்னும் நமக்கு சட்டமன்ற தேர்தலுக்கு 4.5 ஆண்டுகளும், எம்.பி. தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகளும் உள்ளதாகவும்” அவர் குறிப்பிட்டு பேசினார். 

“ஆனால், பொது மக்கள் மனதில் எப்போதுமே, 'உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி தான் நமக்கு நல்லது செய்வார்கள்' என்று, நினைத்து அவர்கள் வாக்களிப்பார்கள்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

“அதே நேரத்தில், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி. தேர்தலில் பொது மக்கள் ஆளுங்கட்சியின் மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்தி, நமக்கு தான் வாக்களிப்பார்கள் என்றும், இதனால் நாம் ஊராட்சி கிளை கழகத்தை வலுப்படுத்தினால் தான், நமது அமைப்பு மிகவும் வலுவான நிலையில் இருக்கும்” என்றும், உறுதியாக தெரிவித்தார்.

குறிப்பாக, “நமது கிளைக் கழகத்தை முறையாக கட்டமைக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் 50 கோடி ரூபாய் கொடுத்தாலும், நாம் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாது” என்றும், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மிகவும் ஆவேசமாக பேசினார்.