தமிழகத்தில் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து தற்போதிலிருந்தே அரசியல் களம் சூடுபிடித்துள்ளதாக தெரிகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணித் தொடர்பாக ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். சமீபத்தில்,  வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக தொடரும் என அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
 
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகித்து வருகிறது. இந்த நேரத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, அதிமுக vs திமுக என்ற நிலை, தற்போது பாஜக vs திமுக என மாறியிருப்பதாகவும், தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் எனவும் தெரிவித்த கருத்து விவாதத்தை உண்டாக்கியது.

தமிழகத்தில் பாஜக வளர்ச்சி பெற்று வருகிறது என்பதையே வி.பி.துரைசாமி அவ்வாறு கூறியதாகவும், தற்போது கூட்டணி தொடர்ந்துகொண்டுதான் இருப்பதாகவும் எல்.முருகன் விளக்கம் அளித்தார்.

இது தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்துக்கு பேட்டியளித்த எல்.முருகன் தான் பாஜக மாநில தலைவராக பதவியேற்ற பிறகு வாக்குச்சாவடி அளவிலான குழுக்களின் எண்ணிக்கையை வலுப்படுத்தவும் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தேர்தல் பணிகள் தொடர்பாக ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் கூட்டங்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

“மத்திய அரசின் நலத்திட்டங்கள் மூலமாக ஒவ்வொரு மாவட்டத்தில் 3-4 லட்சம் பேர் பலனடைந்துள்ளனர். அவர்களை எங்களது ஆதரவாளர்களாகவோ அல்லது வாக்கு வங்கியாகவோ மாற்ற பணியாற்றி வருகிறோம்” என்று கூறினார்.

வி.பி.துரைசாமியின் கருத்தை கூறி, தமிழகத்தில் கூட்டணியை வழிநடத்தும் முனைப்பில் பாஜக உள்ளதா என செய்தியாளர் கேள்வி எழுப்ப, “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அப்படியே உள்ளது. அதுகுறித்து கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை. எங்கள் துணைத் தலைவர் துரைசாமி, கருத்தியல் ரீதியாக திமுக மற்றும் பாஜக முற்றிலும் மாறுபட்டவை என்றுதான் கூறினார். பலர் பாஜகவில் இணைகிறார்கள், அதன் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வருகிறது.

அதிமுகதான் கூட்டணியை வழிநடத்துகிறது. நாங்கள் அதனுடன் இணைந்து பயணிக்கிறோம். ஆனால் தேர்தல் நேரத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப அந்த சூழ்நிலை மாறக்கூடும். எங்கள் கட்சியின் தலைமை பொருத்தமான நேரத்தில் முடிவு எடுக்கும்” என்று தெரிவித்தார். முருகனின் இந்தக் கருத்து தமிழக அரசியல் களத்தில் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.