வேலூர் அருகே “காதல்” திரைப்பட பாணியில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியை, பெண்ணின் பெற்றோர் பிரித்துச் சென்றதால், காதலன் தவித்து 
வருகிறார்.

வேலூர் மாவட்டம் ஏலகிரி மஞ்சக்கொல்லை பகுதியைச் சேர்ந்த அனுராதா என்ற பெண்ணின் மகள் நந்தினி, அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பி.எட் படித்து முடித்து விட்டு, தற்போது பயிற்சி ஆசிரியையாக உள்ளார்.

அதே போல், அதே பகுதியில் ஹோட்டலில் அச்சுதன் என்ற இளைஞன் கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். தாய் - தந்தையை இழந்த அச்சுதன், 
அன்புக்காக ஏங்கி வந்துள்ளார். 

இப்படிப்பட்ட சூழல் நிலையில், ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்த வந்த அச்சுதனுக்கும், பயிற்சி ஆசிரியை நந்தினிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதனால், 
அச்சுதன் - நந்தினி ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.

தற்போது, அந்த காதலர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி, நந்தினி தனது காதலை தனது தாயாரிடம் கூறி உள்ளார். 

ஆனால், நந்தினியின் தாயார் அனுராதா, அச்சுதனுக்கு பெற்றோர்கள் இல்லாத காரணத்தாலும், அவர் ஏழை என்பதாலும் தன் மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். 

மேலும், தாய் அனுராதா, தன் மகள் நந்தினிக்கு வேறு இடங்களில் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தைத் தொடங்கி உள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த இளம் பெண் நந்தினி, தன் காதலன் அச்சுதன் உடன் பேசி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி, அச்சுதன் - நந்தினி ஆகிய இருவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவைக்கு வந்து உள்ளனர். அங்கு ஒரு கோயிலில் வைத்து இருவரும் மாலைகளை மாற்றிக்கொண்டு, இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, ஒண்டிப்புதூர் பகுதியில் அவர்கள் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். 

தன் திருமண வாழ்க்கை மற்றும் வீடு இருக்கும் இடத்தை அச்சுதன், தன் நண்பனிடம் கூறி உள்ளார். அந்த நண்பர் மூலம் இந்த தகவல் நந்தினியின் தாயார் அனுராதாவிற்குத் தெரிய வந்தது.

இதனையடுத்து, தனது உறவினர்கள் சிலரை அழைத்துக் கொண்டு கோவைக்கு புறப்பட்டுச் சென்ற அனுராதா, அங்கு உறவினர்கள் மற்றும் ஊரார் முன்னிலையில் இருவருக்கும் முறைப்படி திருமணம் நடத்தி வைப்பதாக நைசாக பேசி இருவரையும் தங்கள் காரில் ஏற்றி சொந்த ஊர் திரும்பி உள்ளார்.

அப்போது, காரில் வரும் போது, சேலம் சுங்கச்சாவடி அருகே அவர்கள் ஹோட்டல் ஒன்றில் உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது, தனது மகளுக்கும், அச்சுதனுக்கும் பதிவு திருமணம் நடைபெறவில்லை என்பதை அனுராதா தெரிந்துகொண்டார்.

இதுதான், தனக்கான நேரம் என்பதைப் புரிந்துகொண்ட அனுராதா, அந்த ஹோட்டலின் வெளியே அனுராதாவின் குடும்பத்தினர் அச்சுதனை அடித்து உதைத்து விட்டு, நந்தினியை மட்டும் தனியாக வீட்டிற்கு அழைத்து வந்து உள்ளனர். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த காதலன் கணவன், “எனது மனைவியை அவளது பெற்றோர்கள் கடத்திச் சென்று விட்டதாக, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், அவர்களது திருமணம் பதிவு செய்யப்படாத காரணத்தினால், போலீசார் வழக்குப் பதிவு செய்ய வில்லை என்றும் கூறப்படுகிறது. 

இதனால், அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் காதலன் கணவன் அச்சுதன் தவித்து வருகிறார். இந்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.