சின்னத்திரை நடிகை சித்ராவின் உயிரிழப்பு குறித்து அவருடன் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரில் நடித்த வரும் சக நடிகர்கள் வருத்தத்துடனும், மிகவும் உருக்கமாகவும் கருத்து கூறியுள்ளனர்.

சின்னத்திரை நடிகை சித்ரா, “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மூலம் தமிழக மக்களிடையே புகழ் பெற்றுத் திகழ்ந்துகொண்டிருந்தார்.

நல்ல பெயர், நல்ல புகழ் என்று சின்னத்திரையில் உச்சம் தொடும் அளவுக்கு அவர் தற்போது வளர்ந்துகொண்டு வந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த சின்னத்திரை நடிகை சித்ரா, நள்ளிரவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக அவருடன் தங்கியிருந்த ஹேமந்த் ரவியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

28 வயதாகும் சித்ரா பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும், தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” என்ற தொடரில் 'முல்லை' என்ற, கதாபாத்திரத்திலும் அவர் நடித்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில் தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த இளம் வயதில் புகழின் உச்சத்திலிருந்த நடிகை சித்ரா, தனது உயிரை மாய்த்துக் கொண்டது சின்னத்திரை வட்டாரத்திலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில், “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரில் நடிகை சித்ரா உடன் நடித்த சக நடிகர்களான பலரும் சித்ராவின் இறப்பு குறித்து கருத்து கூறியுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து கூறியுள்ள நடிகர் ஸ்டாலின் (மூர்த்தி - பாண்டியன் ஸ்டோர்ஸ்), “எதிர்பார்க்காத அதிர்ச்சி தரும் செய்தி. மிகத் திறமையான ஒரு நடிகர் இப்போது நம்முடன் இல்லை. மிகவும் அதிர்ச்சியடைந்தேன்” என்று, கூறி உள்ளார்.

நடிகர் வெங்கட் ரெங்கநாதன் கூறும் போது, “சத்தியமாக உன்னிடம் இருந்து இப்படி ஒரு முடிவை யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை. எவ்வளவு துணிச்சலான பெண் நீ. ஏன் சித்ரா?” என்று தன்னுடைய ஆதங்கத்தையும், சோகத்தையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.

இது தொடர்பாக ஹேமாராஜ் (மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ்), கூறியுள்ள பதிவில்,“ நீ இப்படி பண்ணியிருக்கக் கூடாது. எதுக்குடி. வார்த்தைகளே இல்லை போடி..” என்றும், அவர் உருக்கமாகப் பதிவிட்டு உள்ளார்.

சின்னத்திரை பிரபலங்கள் மட்டுமல்லாது, வெள்ளித்திரை நட்சத்திரங்களும் சித்ராவின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதன் படி, நடிகை குஷ்பு கூறியுள்ள கருத்தில், “எனக்கு தனிப்பட்ட வகையில் அவர் பழக்கமில்லை. ஆனால், அந்த வலியை உணர்கிறேன். அவர் யாரிடமாவது பேசியிருக்கலாம். அமைதியில் இருப்பீர்கள் என நம்புகிறேன் சித்ரா” என்று, குஷ்பு தனது டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

கவிஞர் மனுஷ்யபுத்திரன் பகிர்ந்துள்ள இரங்கல் செய்தியில், “வருத்தமான கணம் என ஒன்று இல்லவே இல்லாதது போல, எல்லாப்படங்களிலும் சிரித்துக்கொண்டிருக்கிறாள்” என்று, கவிஞர் மனுஷ்யபுத்திரன் கூறியுள்ளார். 

அதே போல், சித்ராவின் திடீர் தற்கொலை அவரது ரசிகர்களுக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்து உள்ள நிலையில், பலரும் அவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் சோகத்துடன் பதிவிட்டு வருகின்றன.