நாடு முழுவதும் புதிய சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு (EIA) தொடர்பான கண்டனக் குரல்கள் பலமாக எழுந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் EIA -வுக்கு முக்கியப் பங்கு உண்டு. 

சூழல் சார்ந்த அரசு சார்பில் எடுக்கப்படும் திட்டங்கள்/முன்னெடுப்புகளில், பிரச்னைகளோடு உள்ளடங்கிய திட்டங்களைத் திருத்தி அமைக்கும் வரையில் அதற்குத் தடை வழங்கவும், அதேநேரம் திருத்திக் கொள்ள முடியாத எதிர்வினைகள் கொண்ட அந்த திட்டத்தைத் தடை செய்யவும், சூழலியல் தாக்க மதிப்பீடு உதவும். 

இந்த மதிப்பீட்டுக்கான வரைவு, சில காலங்களுக்கு ஒருமுறையெனப் புதுப்பிக்கப்படும். அப்படி, இப்போது புதிப்பிக்கப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அமலுக்கு வரும் முன், விமர்சனங்களுக்கு வைக்கப்படுவது வழக்கம். அப்படித்தான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தற்போது சூழலியல் தாக்க மதிப்பீடு விதிகளுக்கான புதிய வரைவும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. 

இதில், நிறைய பிரச்னைகளோடு இருக்கிறது என்றும், இதேநிலையில் நீடித்தால் வருங்காலத்தில் பெருநிறுவனங்களின் வளர்ச்சியில் சூழலியல் முழுவதுமாக அழியக்கூடும் என்றும்கூறி எதிர்ப்புக்குரல்கள் பலமாக உருவாகி வருகின்றன.

முதலில் இதற்காக எதிர்ப்புக் குரல் கொடுத்த காரணத்துக்காக இணையதளங்கள் சிலவற்றை முடக்கியது மத்திய அரசு. இவ்வளவுக்கும், மதிப்பீட்டு வரைவுக்கு எதிரான குரலை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்பதே சூழல். அப்படியான நிலையிலும், அரசின் இப்படிச் செய்தது, மிகப்பெரிய பேசுபொருளானது.

இதற்கிடையில், இப்போது சுற்றுச்சூழல் சார்ந்த குற்றச்சாட்டுகள் பல மத்திய மாநில அரசுகள் மீது வைக்கப்பட்டு வருகின்றன.

அப்படி, நேற்றைய தினம், ஃபேஸ்புக் நபரொருவர், தன் அருகில் நடந்தவொரு நிகழ்வை வீடியொ வடிவில் பதிவு செய்திருக்கிறார். அதில், அவருடைய நண்பரொருவர் பல்லாவரம் நகராட்சியின் ஒப்பந்ததாரர் குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவு நீரை அகற்றி பல்லாவரம் பெரிய ஏரியில் அப்புறப்படுத்துவதைப் பதிவு செய்து உள்ளார். தேசிய பசுமை தீர்ப்பாயம் (தென் மண்டலம்) ஏரியினுள் கழிவுநீரைக் கலக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருந்த போதிலும் தொடர்ந்து பல்லாவரம் நகராட்சி இச்செயலைச் செய்து வருகிறது என்று கூறியிருக்கும் அவர், இத்தொடர்பாக தனது நண்பர் காவல் கட்டுப்பாட்டு அறைக்குப் புகார் அளித்தபோது மறுமுனையில் பேசிய காவலர், நகராட்சி கழிவுநீரை ஏரியில் விடுவதை நியாயப்படுத்திப் பேசியிருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் என்பது, இந்திய அரசியலமைப்பின் 21வது சட்டப்பிரிவுக் கூற்றின் கீழ், சுற்றுச்சூழல் தொடர்பான பிணக்குகளை விரைவாகத் தீர்க்கவும், உயர்நீதிமன்றங்களில் நடப்பில் இருக்கும் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளைக் குறைக்கவும், இந்தியக் குடிகளுக்கு நலமிகு சுற்றுச்சூழலுக்கான உரிமையை நிலைநாட்டவும் 2010இல் நிறுவப்பட்ட ஓர் அமைப்பு. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு, சுற்றுச்சூழல், காடுகள், அனைத்து விதமான இயற்கை ஆதாரங்கள் ஆகியவற்றைப் பேணிக் காப்பது, இதன் கடமை. இயற்கை வளங்களைச் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பது, சேதப்படுத்துவது போன்ற பிரச்னைகளின் போது, ஆராய்ந்து முடிவு எடுக்கும் உரிமை இதற்கு உள்ளது. 

அதேபோல இயற்கை இடர்பாடுகள் மூலம் தனிநபருக்கு ஏற்படும் இழப்புக்கு, இழப்பீடு பெற்றுத் தரும் பணியையும் செய்கிறது. சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை இந்த அமர்வு எடுத்துக் கொள்வதால், உயர்நீதிமன்றத்தின் பணி குறைக்கப்படுகிறது

இப்படி மக்களுக்காகவும் சூழலுக்காகவும் செயல்பட வேண்டியவர்களேவும், இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, சமூக வலைதலங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.

மத்திய அரசை எதிர்த்து ஏற்கெனவே EIA தொடர்பான குற்றச்சாட்டுகளும் வலுத்து வரும் நிலையில், மாநில அரசை எதிர்த்து இந்த விஷயம் பூதாகாரமாகி வருகிறது. இரு அரசுகள் தங்கள் மீதான குற்றச்சாட்டைப் போக்க, நடவடிக்கை எடுக்குமா இல்லையா என்பது, வரும் நாள்களில் தெரியவரும்! பார்ப்போம்!

- பெ.மதலை ஆரோன்.