தமிழகத்தில் மீட்பு பணிகளுக்கு, விமானப்படை ஹெலிகாப்டர்கள், கடலோர காவல் படையின் ஐந்து டோனியர் விமானங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன என்று தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக, கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 5,100 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு, தேசிய பேரிடர் மீட்பு படையின் 8 குழுக்கள் கடலூர், நாகை, தஞ்சாவூர், மதுரை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு தலா ஒரு குழுவும், சென்னை மணலிக்கு 3 குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்கள் தஞ்சை, கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீச்சல் தெரிந்த 19,547 பேர், மரம் அறுக்கத்தெரிந்த 15,912 பேர், பாம்பு பிடிப்பவர்கள் 3,117 பேர், கால்நடை பாதுகாப்பிற்கு 19,535 பேர் என சுமார் 1.05 லட்சம் தன்னார்வலர்கள் கண்டறியப்பட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

k5

இந்திய விமான படையின் நான்கு ஹெலிகாப்டர்கள் கோவை சூலுார் விமான தளத்திலும். கடலோர காவல் படையின், ஐந்து டோனியர் விமானங்களும், இரண்டு ஹெலிகாப்டர்களும் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பும் வகையிலும் தயார் நிலையில் உள்ளன. தீயணைப்பு வாகனங்களும் தயாராக உள்ளன.

கடலில் மீன்பிடிக்க சென்ற 33,773 படகுகள் பத்திரமாக கரை சேர்ந்துள்ளன. பேரிடர் குறித்த அறிவிப்புகளை மக்களிடம் சேர்க்க, 434 இடங்களில் முன்னெச்சரிக்கை தகவல் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் நெல் பயிர் சேதங்களை உடனடியாக கணக்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் 90 நீர்தேக்கங்களில் 53 நீர் தேக்கங்களில் 76 சதவிகிதத்திற்கு மேலாக நிரம்பி உள்ளது. 14,138 ஏரிகளில் 9,153 ஏரிகள் 50 சதவீதத்திற்கு மேலாக நிரம்பியுள்ளன. இவற்றுள் 3,691 ஏரிகள் 100 சதவிகிததிற்கு மேலாக நிரம்பி உள்ளது. ஏரிகளில் பகல் நேரத்தில் மட்டுமே தண்ணீரை திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

மழை நீர் தேங்கி உள்ள 400 பகுதிகளில், 240 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் இராட்சத பாம்புகள் மூலம் அகற்றப்பட்டது. எஞ்சிய 160 பகுதிகளில் மழை நீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

k2

16 சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கி இருந்த நிலையில் 15 சுரங்க பாதையில் வெள்ள நீர் அகற்றப்பட்டது. எதிர்காலத்தில் இது போன்ற சூழல் இல்லாத நிலையை உருவாக்குவோம். நேற்று மட்டும் திருவாரூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்கில் மொத்தம் 3 பேர் மழைக்கு உயிரிழந்துள்ளனர். தேசிய பேரிடர் படையினர் கூடுதலாக தேவை பட்டால் பயன்படுத்த தயாராக இருக்கிறோம். கடற்கரையோர மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், சில இடங்களில் 20 செ.மீ.க்கு மேலாக மழை பெய்யலாம் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவும். அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பேரிடர் காலத்தில் தடையில்லா தகவல் தொடர்பை உறுதி செய்ய, தொலை தொடர்பு நிறுவனங்களின் அலுவலர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. தொலை தொடர்பு நிறுவனங்களிடம் 50 நடமாடும் 'டவர்'கள் தயார் நிலையில் உள்ளன. 

பேரிடர் காலங்களில் தொலைத் தொடர்பு அமைப்புகளை சீரமைக்க, தேவையான போக்குவரத்திற்கு மாவட்ட நிர்வாகம் உதவி புரிய வேண்டும். எரிபொருள் இருப்பை உறுதி செய்ய, எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ இவ்வாறு வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.