“பல இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக தொண்டர்கள், தோல்வியுற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக” அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டு தோல்விக்கு விளக்கம் அளித்து உள்ளனர்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வந்த நிலையில், தற்போது வரையிலான நிலவரப்படி, திமுக அதிகமான இடங்களை கைப்பற்றி உள்ளது.

இந்த 9 மாவட்ட ஊராட்சிகளையும் திமுக தன் வசப்படுத்தி உள்ளது. அதாவது, 1,324 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 991 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. அதிமுக 200  இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. 

140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 138 இடங்களை கைப்பற்றிய நிலையில், அதிமுக 2 இடங்களில் மட்டுமே வென்று உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்திருப்பது தமிழக அரசியலில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

இந்த நிலையில் தான், “அதிமுகவின் தோல்விக்கு திமுகவின் விதிமீறல்கள் தான் காரணம்” என்று, ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளித்திருக்கிறார்கள். 

இது தொடர்பாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டாக வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “அராஜகத்தின் அத்தியாயம் திராவிட முன்னேற்றக் கழகம் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வன்முறையையும், ஜனநாயகம் காணாத அக்கிரமங்களையும் கட்டவிழ்த்துவிட்டு மிகப்பெரிய தேர்தல் வன்முறையையும் நடத்தி முடித்திருக்கிறது” என்று, பகிரங்கமாகவே குற்றம்சாட்டி உள்ளனர்.

“திமுகவிற்கு சாதகமாக வாக்கு எண்ணிக்கை பல இடங்களில் தாமதமாக தொடங்கி உள்ளது என்றும், அதிமுக முகவர்கள் பல இடங்களில் மையங்களில் அனுமதிக்கப்படவில்லை என்றும், முறைகேடுகள் தொடர்பான புகார் மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை” என்றும், அவர்கள் கூறியுள்ளனர்.

“சிசிடிவி கேமராக்கள் பல இடங்களில் பழுதடைந்து இருப்பது ஐயத்தை ஏற்படுத்துகிறது” என்றும், அவர்கள் பல குற்றஞ்சாட்டுக்களை முன்வைத்து உள்ளனர்.

குறிப்பாக, “மாநில தேர்தல் ஆணையத்தை தனது கைப்பாவையாக திமுக அரசு மாற்றி விட்டதாகவும், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வன்முறை நடந்துள்ளதாகவும்” குறிப்பிட்ட இருவரும், “திமுக அரசும், தேர்தல் ஆணையமும் நடத்தி உள்ள விதிமீறல்களை பட்டியலிட்டால் நாடு தாங்காது” என்றும், அவர்கள் இருவரும் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளனர்.

இதனிடையே, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்களில் 77 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்திருந்த நிலையில், அந்த வெற்றியின் எண்ணிக்கை தற்போது 110 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.