தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.949 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் கடந்த 25.05.2005 முதல், நூறு நாள் வேலைத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. துவங்கிய நாள் முதல் 2009 செப்டம்பர் வரை “தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்” என்ற பெயரில் இயங்கி வந்தது. காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2, 2009 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற பெயரில் இயங்கி வந்தது. ஆரம்பம் முதல் தமிழகத்தில் இத்திட்டம் “100 நாள் வேலைத்திட்டம்” என்றே அழைக்கப்படுகிறது.

பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால், பருவமழை பொய்த்துப் போவதால் ஏற்படும் வறட்சி மற்றும் வறுமையின் கோரப் பிடியில் சிக்கி உண்ண உணவு இன்றி கிராமப்புற கூலி விவசாயிகளும், ஏழை, நடுத்தர விவசாயிகளும் தவித்து வரும் நிலை இந்தியாவில் நீடிக்கிறது. கூடுதலாக தனியார்மய தாராளமய திட்டங்களின் கீழ், உர மானியம் உள்ளிட்ட பல்வேறு மானியங்கள் வெட்டப்பட்டு, விவசாயமே அழிந்து போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, மக்கள் அரசுக் கட்டமைப்புக்கு எதிராக வெகுண்டெழாமல், அவர்களது குறைந்தபட்சத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு சீர்திருத்த நடவடிக்கையாக, தற்காலிக நிவாரணமாகத் கொண்டுவரப் பட்டதுதான் 100 நாள் வேலைத் திட்டம், என்பதை யாராலும் மறுக்க முடியாது.

மேலும் இத்திட்டத்தின் மூலம், கிராமங்களில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படுவது, நீர் வழித்தடங்களை சீரமைப்பது, புதிய பண்ணைக் குட்டைகளை அமைப்பது, மரக் கன்றுகள் நட்டு வன வளம் பெருக்குவது போன்ற பணிகள் செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 2000 பெண்கள் இணைந்து இவ்வேலைத்திட்டத்தின் கீழ், வறண்டு கிடந்த ஜவ்வாது மலை நாக நதி நகரக் கழிவுகளால் நாசமடைந்து ‘கூவமாக’ மாறியதை தங்களது கூட்டு உழைப்பால் மீட்டுருவாக்கம் செய்து இந்த நதியை மீண்டும் நீரோடும் ஜீவநதியாக மாற்றியுள்ளனர். இந்த மாற்றத்தைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட நிர்வாகம் பிற நதிகளான, அகரம் ஆறு, கவுண்டன்ய மகாநதி, மலட்டாறு, பாம்பாறு, மத்தூர் ஆறு ஆகிய ஆறுகளையும் இத்திட்டத்தின் கீழ் சீரமைத்து வருகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் ஏராளமான ஏழை எளிய மக்கள் பலன் அடைந்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்த  நூறு நாள் வேலை திட்டத்திற்காக ரூ.949 கோடி ஒதுக்கீடு  செய்து அதற்கான  அரசாணையை தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில்  தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு சார்பில் 75% நிதியும், மாநில அரசு சார்பில் 25% நிதியும் ஒதுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாநிலங்கள் பயன்படுத்திய நிதி குறித்த புள்ளி விவரங்கள் நாடாளுமன்ற மக்களவையில்  வெளியிடப்பட்டது.

அரசாணையில் மார்ச் 24-ம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும்  கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ்  ரூ.28,150 கோடி செலவில் சுமார்   82.85 லட்சம் பணிகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.  அதிகபட்சமாக தமிழகத்தில் ரூ.5,413 கோடி செலவில் 4.67 லட்சம் பணிகள் செய்யப்பட்டுள்ளது.  அதையடுத்து  ரூ.2,806 கோடி செலவில்  மத்தியபிரதேசம் 6.61 லட்சம் பணிகளை செய்து முடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவிதுள்ளது.