திருமண ஆசை காட்டி “ஒரு நாள் மனைவி”யாக நடித்த பெண் உட்பட 5 பெண்கள் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் திருப்பூரில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த 34 வயதான ராஜேந்திரன், அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பா்த்து வருகிறார்.

இப்படியான சூழல்நிலையில், திருமணத்திற்காக கடந்த 7 வருடமாக பெண் தேடி வந்து உள்ளார். ஆனால், இவருக்கு ஏற்றபடியான பெண் யாரும் சரியாக அமையவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால், ராஜேந்திரனுக்கு வயது ஏறிக்கொண்டே இருந்தது. ஆனாலும், பெண் மட்டும் அவருக்கு அமையவில்லை.

இந்த சூழலில் தான், திருமணம் செய்ய புரோக்கர்களை நாட முடிவு செய்த ராஜேந்திரன், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூரில் இருக்கும் ஒரு தரகர் சந்திரனை பார்த்து பேசி உள்ளார். 

அந்த சந்திப்பின் போது, அவரும் திருப்பூர் செட்டிபாளையத்தில் தனக்கு தெரிந்த பெண் தரகர் ஒருவர் இருப்பதாக கூறி, அவருக்கு நிறைய மணமகள்களைத் தெரியும் என்று கூறிய, அவரது தொடர்பு எண்ணை கொடுத்து, அவரிடம் பேச சொல்லி இருக்கிறார்.

இதையடுத்து, அந்த பெண் தரகிடம் பேசிய நிலையில், ராஜேந்திரன் மற்றும் அவருடைய நண்பர்கள் என மொத்தம் 3 பேரும்0 திருப்பூர் பெண் தரகர் அம்பிகா என்பவரது வீட்டிற்கு சென்று உள்ளனர். அங்கு தரகர் அம்பிகாவின் வீட்டில் ரீசா என்ற இளம் பெண் ஒருவர் இருந்து உள்ளார்.

அப்போது ராஜேந்திரனிடம், அந்த பெண் தரகர், “ரீசா தான் மணமகள்” என்று, அவரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

அந்த பெண்ணை பார்த்ததும் ராஜேந்திரனுக்கு பிடித்து விடவே, இதையடுத்து பெண் புரோக்கர், “திருமணம் செய்யக் கூடிய பெண்ணுக்கு தாய் தந்தை யாரும் இல்லை என்றும், பெண்ணுக்கு தாலி மற்றும் தோடு, துணி ஆகியவற்றை மாப்பிள்ளை வீட்டாரே வாங்கித் தர வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கண்டிஷன் போட்டு உள்ளார். 

அதே போல், “எனக்கும் புரோக்கர் கமிஷனாக 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் தர வேண்டும்” என்றும், அவர் கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்டு சற்று அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன், “பெண் கிடைக்காமல் இருப்பதால், இந்த இளம் பெண் கிடைப்பதை நினைத்து” ராஜேந்திரன் சரி என்று சம்மதம் சொல்லியிருக்கிறார்.

அதன்படியே, மணமகளுக்கு யாரும் இல்லாததால், அடுத்த 2 நாட்களில் திருமணம் நடக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. 

அதன்படியே, கடந்த மாதம் 24 ஆம் தேதி மணமகனின் குலதெய்வ கோயிலில் புரட்டாசி மாதம் என்று கூட பார்க்காமல் திருமணம் தடல்புடலாக நடந்திருக்கிறது. 

மணமகன் தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மணமகள் கழுத்தில் முறைப்படி தாலி கட்டினார்.

திருமணத்தின் போது பெண் வீட்டிலிருந்து பெரியம்மா தேவி, அவரது அக்கா தங்கம் ஆகியோருடன் பெண் புரோக்கர்கள் அம்பிகா, வள்ளியம்மாள் ஆகிய இருவரும் வந்திருந்தனர். ஆனால், மாப்பிள்ளை வீட்டிலிருந்து உறவினர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

திருமணத்தின் முதல் நாள் இரவு அவர்களுக்குள் “முதல் இரவாக” சந்தோசமாக நடந்திருக்கிறது. 

ஆனால், முதல் இரவு முடிந்த அடுத்த நாள் ராஜேந்திரன் வீட்டில் இல்லாத நேரத்தில், அரைபவுன் தாலி, தோடு மற்றும் பட்டுப்புடவை என சில பொருட்களுடன் வெளியே சென்ற ரீசா, அங்கு வந்த காரில் ஏறி புறப்பட்டு சென்றிருக்கிறார்.

அதன் பிறகு, அந்த பெண் கணவன் வீட்டிற்கு திரும்பி வரவே இல்லை. இதனையடுத்து, மனைவியின் செல்போனுக்கு ராஜேந்திரன் தொடர்பு கொள்ள முயன்ற போது, ரீசாவின் செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்திருக்கிறது. 

இதனால், பெண் தரகரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்களிமிடமிருந்து சரியான பதில் வரவில்லை. 

அப்போது தான், மோசடி கும்பலால் தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரயி வந்திருக்கிறது. 

அத்துடன், “அரைபவுன் தாலி, அரைப் பவுன் தோடுடன் ஒரு நாள் மனைவி மோசடியாக தன்னை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றது அவருக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து, சிறுவலூர் புரோக்கர் மூலம் ரீசாவின் ஊரான அரியலூர் சென்று விசாரித்த போது, அவருக்கு ஏற்கனவே ஜெய் ஸ்ரீதர் என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதும், 5 பெண்களும் சேர்ந்து தன்னை ஏமாற்றிய உண்மையும் தெரிய வந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன், குன்னத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட ஒரு நாள் மனைவியான ரீசா, பெரியம்மா தேவி, அக்கா தங்கம் மற்றும் தரகர் வள்ளியம்மாள், அம்பிகா ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.