தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பொது பஸ் போக்குவரத்துக்கு வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வருகிற 7-ந்தேதி முதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து, முதல்வா் பழனிசாமி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

``கொரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது. அதேசமயம், பொது மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும், பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில், இப்போது தமிழகத்தில் மாவட்டத்துக்குள்ளான பொதுப் பேருந்து போக்குவரத்து, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் தரிசனம், வணிக வளாகங்கள், தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இந்த பொது முடக்க உத்தரவு, சில கட்டுப்பாடுகளுடன் செப்டம்பா் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இப்போது மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு முக்கியப் பணி மற்றும் வியாபார நிமித்தமாகச் சென்று வர பொதுமக்களிடம் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, செப்டம்பா் 7-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையேயும் அரசு மற்றும் தனியாா் பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி தரப்படுகிறது.

பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு தளா்வுகளை அரசு அறிவித்தாலும், வெளியில் செல்லும் போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது, வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பைப் பயன்படுத்தி கை கழுவ வேண்டும். வெளியிடங்களில் சமூக இடைவெளியைத் தவறாமல் கடைப்பிடிப்பது உள்ளிட்ட அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்றினால் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முடியும்"

இவ்வாறு சொல்லப்பட்டது.

இந்த நிலையில் மாநிலத்துக்குள்ளாக சுமார் 3 ஆயிரம் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த பஸ்களும் வருகிற 7-ந்தேதி முதல் ஓடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆம்னி பஸ்களை வருகிற 7-ந்தேதி முதல் இயக்கவாய்ப்பு இல்லை என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்து இருக்கின்றனர்.

இதுதொடர்பாக அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்கள். அந்த ஆலோசனையின் நிறைவில் இந்த முடிவை அவர்கள் எடுத்து இருக்கின்றனர்.

இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் அ.அன்பழகன் கூறியதாவது:-

``கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பஸ்கள் இயக்கப்படவில்லை. ஒரு பஸ்ஸை அதன் உரிமையாளர் எடுத்து இயக்குவதற்கு குறைந்தது ரூ.2 லட்சமும், கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 2 காலாண்டு சாலை வரியாக ரூ.2½ லட்சமும் என மொத்தம் ரூ.4½ லட்சம் தேவைப்படுகிறது.

எங்களுக்கு பஸ்களை இயக்க வேண்டும் என்ற ஆசைகள் இருந்தும், எங்களால் இயக்கமுடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதனால் வருகிற 7-ந்தேதி முதல் ஆம்னி பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை. முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு, 2 காலாண்டு சாலை வரியை தள்ளுபடி செய்வதோடு, மேலும் சில கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்திடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனால் பேருந்தை இயக்க விருப்பமிருந்தும் இயலாத நிலையில் இருப்பதாக கூறிய அன்பழகன், சாலை வரியை ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.