பல்லடம் அருகே வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, வட மாநில பெண்ணை 6 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ஒரு அட்டைப்பெட்டி தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சல்கோவா அஞ்சல் - 22 வயதான பிரெமோஜோதி தூரி தம்பதியினர் வேலை செய்து வருகின்றனர். அப்போது, வேலை செய்யும் இடத்தில் இவர்களுக்குத் திருப்பூரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். 

அந்த நேரம் பார்த்து உடுமலையில் வேலை குறைவாக இருந்ததால், ராஜேஸ்குமாரிடம் “வேலை எதாவது வாங்கித் தாருங்கள்” என்று, வட மாநில பெண் 22 வயதான பிரெமோஜோதி தூரி கூறியிருக்கிறார். 

அதன்படி, ராஜேஷ்குமாரும் 2 நாட்களில் சொல்கிறேன் என்று கூறிவிட்டு, அந்த பெண்ணின் செல்போன் நம்பரை வாங்கி சென்றுள்ளார். அதன் தொடர்ச்சியாக அடுத்த சில நாட்களில் அந்த பெண்ணை திருப்பூருக்கு நேரில் வர சொல்லி இருக்கிறார். இதனால், ராஜேஷ்குமார் சொன்ன ஊரான திருப்பூருக்கு, அந்த வட மாநில பெண் கடந்த 28 ஆம் தேதி வந்து உள்ளார். 

அதன் பிறகு, அந்த வட மாநில இளம் பெண் பிரெமோஜோதி தூரியை, தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஒரு சில நிறுவனங்களுக்கு நேரில் சென்று வேலை கேட்டுள்ளனர். ஆனால், எங்கும் வேலை கிடைக்க வில்லை. இதன் காரணமாக, “என்னை மீண்டும் பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடும்படி” ராஜேஷ் குமாரிடம் அந்த பெண் கூறியுள்ளார்.

அப்போது, “எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு, அதனால் என்னுடைய தம்பி ராஜூவுடன் இருசக்கர வாகனத்தில் செல்லுங்கள்” என்று ராஜேஷ்குமார் கூறி, தன் தம்பியுடன் அந்த வட மாநில பெண்ணை அனுப்பி வைத்திருக்கிறார்.

ராஜேஷ்குமார் சொன்னதை நம்பி, அந்த வட மாநில பெண்ணும்,  ராஜூவுடன் இருசக்கர வாகனத்தில் ஏறி சென்றுள்ளார். ஆனால், ராஜூ பேருந்து நிலையம் செல்லாமல், அங்குள்ள உகாயனூர் அருகில் இருக்கும் பாறைக்குழிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, ஏற்கனவே வந்து காத்திருந்த ராஜூவின் நண்பர்களான தாமோதரன், அன்பு, தமிழ், கவின் ஆகியோர் சேர்ந்து அந்த அசாம் மாநில பெண் பிரெமோஜோதியை கூட்டாகச் சேர்ந்து மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பாலியல் பலாத்காரம் செய்து பிறகு, அந்த பெண்ணை மிரட்டிய அவர்கள், இது குறித்து வெளியே கூடாது என்றும், எச்சரித்துள்ளனர்.

மேலும், அந்த அசாம் மாநில பெண் பிரெமோஜோதியின் வைத்திருந்த செல்போன், பணம் உள்ளிட்டவற்றையும் பறித்துக்கொண்டு, அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அங்கிருந்து நேராக பல்லடம் காவல் நிலையம் சென்று தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம் குறித்து புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரையும் தீவிரமாகத் தேடி வந்தனர். 

இந்நிலையில், இந்த குற்றச் செயலில் தொடர்புடைய ராஜூ, கவின், அன்பு ஆகிய 3 பேரையும் பல்லடம் போலீசார் கைது செய்து உள்ளனர். அத்துடன், கைது செய்தவர்களிடமிருந்து ஒரு செல்போன், 2 ஆயிரம் ரூபாய் பணம், அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

அதே நேரத்தில், இந்த வழக்கில் தலைமறைவாகவுள்ள தாமோதரன், ராஜேஷ் குமார், தமிழ் ஆகிய 3 பேரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.