செப்டம்பர் 7-ம் தேதி முதல் மாநிலத்துக்குள் பயணியர் ரயில் சேவைக்கும், மாவட்டங்களுக்கு இடையே அரசு பேருந்துப் போக்குவரத்துக்கும் தமிழக அரசு நேற்றைய தினம் அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார். 

இதுவொருபுறம் இருக்க, செப்டம்பர் 1 முதல், உள்மாவட்டங்களுக்கான பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டன. இருப்பினும், அரசு சார்பில், ``பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தாலும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முககவசம் அணிவது, வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவது, வெளியிடங்களில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிப்பது உள்ளிட்ட அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றினால், இந்த நோய்த் தொற்று பரவாமல் தடுக்க முடியும். எனவே பொதுமக்கள் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று முதல்வர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆனால், போக்குவரத்து தளர்வு வந்தவுடன், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளதால் பேருந்துகளில் கூட்டம் அலைமோதத் தொடங்கி உள்ளது. 

இதனால்,சமூக இடைவெளி கேள்விக்குறியாகி வருகிறது. இதன் காரணமாக வைரஸ் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், அரசு  கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த இரு நாட்களாக சென்னையில் பேருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில்,  அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று முதல் சென்னை உள்பட பல பகுதிகளில், அரசின் நெறிமுறைகள் காணாமல் போய்விட்டது. மக்கள் எப்போதும்போல,  பயணிக்கத் தொடங்கி விட்டனர். பேருந்து நடத்துனர்களும், அரசின் உத்தவை காதில் வாங்கிக்கொள்ளாமல், பேருந்து முழுவதும் பயணிகளை ஏற்றி வருகின்றனர்.

மாநகர பேருந்துகளில் சமூக இடைவெளி இல்லாமல் பயணிகள் பயணித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில், அரசு உடனே தலையிட்டு, மேலும் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போதைக்கு தமிழகத்தில், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட 7 போக்குவரத்துக் கழகத்தின் கீழ் சுமாா் 19 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 5 மாதங்களுக்கு முன் கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, பேருந்து சேவை நிறுத்தப்பட்டு, அத்தியாவசியப் பணிகளுக்காக மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்ட போதிலும், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்கவில்லை. இந்நிலையில், ஒருசேர தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்குள் மட்டும் பேருந்துகள் இயக்க அனுமதியளித்து, முதல்வா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டிருந்ததாா்.

தளர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக அறிவித்து வரும் தமிழக அரசு, வரும் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மாநிலத்துக்குள் பயணியர் ரயில் சேவைக்கும், மாவட்டங்களுக்கு இடையே அரசு பேருந்துகளுக்கு அனுமதி அளித்திருக்கிறதென்பது, ஆபத்தை இன்னும் கூட அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பொதுமக்கள் அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றினால், இந்த நோய்த் தொற்று பரவாமல் தடுக்க முடியும். இல்லையெனில், மருத்துவர்கள் எச்சரிக்கை உண்மையாகக்கூடும்!