“வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டார்” என்று, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தற்போது மிகவும் சூடுப்பிடித்து உள்ளது. இதனால், அனைத்து அரசியல் கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளன.

இப்படி தேர்தல் பிரச்சாரம் தொடங்கும் முன்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த், “புதிதாகக் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்” என்று முதலில் அறிவித்தார். ஆனால், அவர் நடித்து வரும் “அண்ணாத்த” படப்பிடிப்பின் போது 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் நடித்து வந்த படப்பிடிப்பு அப்படியே ரத்து செய்யப்பட்டது. 

அத்துடன், அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு 
பிறகே அவர் சென்னை திரும்பினார்.

இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், “அரசியலில் ஈடுபட்டு கட்சி தொடங்கப் போவதில்லை” என்று, நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று அறிவித்தார்.

“நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று, நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு, அவரது ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தாலும், இது  ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுக்கும் ஆச்சரியமாக இருந்தது. 

ஆனாலும், “அரசியலில் ஈடுபட்டு தமிழகத்தில் நல்லாட்சி தர வேண்டும்” என்று, அவருடைய ரசிகர்கள் பல்வேறு இடங்களில் தங்களது கருத்துக்களைத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, ரஜினி ரசிகர்கள் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் அடுத்தடுத்து இணைந்து வந்தனர். இதனையடுத்து, நடிகர் ரஜினி மக்கள் மன்றத்தினர், ராஜினாமா செய்து விட்டு எந்த கட்சியிலும் அவர்கள் சேரலாம் என ரஜினி மன்ற நிர்வாக சுதாகர் அறிவித்தார்.

இந்த நிலையில், “நடிகர் ரஜினிகாந்த் இந்த தேர்தலில் நூறு சதவிகிதம் கட்சி தொடங்கிப் போட்டியிடவில்லை” என்று, ரஜினி மக்கள் மன்றத்தின் தலைவர் சுதாகர், நிர்வாகிகளுக்கு தொலைப்பேசி மூலமாகத் திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளதாகத் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. 

அத்துடன், “அர்ஜூன மூர்த்தி தொடங்கும் கட்சிக்கும், ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றும், சுதாகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போல், நடிகர் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாகப் பரவும் தகவல் பொய்யானது” என்றும், சுதாகர் தெரிவித்து உள்ளார்.