மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் தொகுப்பிற்கு தமிழகத்திலிருந்து ஒதுக்கப்படக் கூடிய மருத்துவ இடங்களில் 50% ஓ.பி.சி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் முக்கிய கோரிக்கையாகும். இது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட் இட ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தலாம் என்ற கருத்தை சொல்லி இருந்தனர்.

இதற்கிடையே, இந்த ஆண்டே இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டுமென கோரி தமிழக அரசு மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50% இடஒதுக்கீடு வழங்க முடியாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள சூழலில், உடனடியாக இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை எடுக்க முடியாது. இட ஒதுக்கீடு வழங்கும் பட்சத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என மத்திய அரசு கூறியது. வாதப் பிரதிவாதங்கள் முடிந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு அமல்படுத்த உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.