நிவர் புயல் அடங்கிய பின்பும், காற்றும் இன்னும் அடங்காமல் வீசிக்கொண்டே இருக்கிறது.

வங்கக் கடலின் தெற்குப் பகுதியில் நேற்று உருவான நிவர் புயலானது, நேற்றிரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 வரை முழுவதுமாக கரையைக் கடந்து விட்டது.

நிவர் புயல், அதி தீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது வலுவிழந்து தீவிரப் புயலாகவே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்த நேரத்தில் புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் மணிக்கு 120 முதல் 140 கிலோ மீட்டர் வேகம் வரையில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை கொட்டி தீர்த்தது. இதனால், அந்த பதியில் சாலையின் ஓரங்களில் இருந்த மரங்கள் அப்படியே சாய்ந்து விழுந்தன. பல முக்கிய சாலைகளில் மழை நீர் குளம் போல் காட்சி அளிக்கின்றன. ஏற்கனவே, புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலும், தற்போதும் அங்கு மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில், நிவர் புயல் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்றது. தற்போது, நிலப்பரப்புக்குள் நகர்ந்து வரும் நிவர் புயல் படிப்படியாக வலுவிழந்து வருகிறது.  

அத்துடன், நிவர் புயலால், சென்னை ஒட்டிய கடற்கரை ஓரங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. அத்துடன், அந்த பகுதியில் கன மழையும் பெய்து வருகிறது. 

மேலும், நிவர் புயல் காரணமாக 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதன் படி, “புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மழை தொடரும்” என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

“அரியலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, காரக்கால், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, பெரம்பலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்யும்” என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் படி, சில பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

அதே போல், நிவர் புயலையொட்டி புதுச்சேரி, கடலூர் துறைமுகங்களில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காரைக்கால் தனியார் துறைமுகத்தில் 8 ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அத்துடன், இன்றும் அரசு சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீனவர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். புயல் காரணமாக கடல் பகுதியில் கடும் சீற்றம் காணப்படுகிறது. அலைகள் சீறிப்பாய்வதையொட்டி பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடையும் தற்போது விதிக்கப்பட்டுள்ளது.

அதே போல், நிவர் புயல் கரையை கடந்த நிலையில் இன்று நண்பகல் 12 மணி முதல் 7 மாவட்டங்களில் மீண்டும் அரசு பேருந்துகள் இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன் படி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் மீண்டும் பேருந்து சேவை தற்போது தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.