நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இழப்பீடாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். 


இது தொடர்ப்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘’ நிவர் புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க 641.83 கோடி ரூபாயும், நிரந்தரமாக சீரமைக்க 3108.55 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 3,750.38 கோடி ரூபாய் தேவைப்படும் என மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு, மத்திய அரசின் நிதி உதவி கோரப்பட்டுள்ளது.  

மேலும், ‘புரெவி’ புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க  485 கோடி ரூபாயும், நிரந்தரமாக சீரமைக்க 1,029 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 1,514 கோடி ரூபாய் தேவைப்படும் என தெரிவித்து மத்திய அரசின் நிதி உதவி கோரப்பட்டுள்ளது.

விவசாயிகள் வங்கி கணக்கில் ஜனவரி 7 ஆம் தேதி முதல் நேரடியாக நிவாரணம் வரவு வைக்கப்படும். மானாவாரி மற்றும் பாசன வசதி பெற்ற நெற்பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500க்கு பதில் ரூ.20,000 வழங்கப்படும். 2 ஹெக்டேர் உச்ச வரம்பின்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும். இதற்காக அரசு ரூ. 600 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலம் சுமார் 5 லட்சம் பேர் பயனடைவர். ’’ என  தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.