“கொரோனா வைரஸ் என்னைத் தாக்காது!” - நித்தியானந்தா கல கல..
By Aruvi | Galatta | 06:23 PM

“கொரோனா வைரஸ் என்னைத் தாக்காது” என்று நித்தியானந்தா கல கலப்பாகப் பேசி உள்ளார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்தியானந்தா மீது, பாலியல் மற்றும் பெண்களைக் கடத்தியதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் அவர் ஆஜராகாமல், தலைமறைவானதால், அவருக்கு எதிராக 'புளு கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது அவர் தேடப்பட்டு வருகிறார்.
இதனிடையே, அவர் ஈக்வேடார் அருகே கைலாசா என்ற பெயரில் ஒரு தீவை உருவாக்கி, தனி நாடாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நாட்டில் குடியேறுவதற்கு சுமார் 40 லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறி, நித்தியானந்தா அடுத்தடுத்து அதிர்ச்சியைக் கிளப்பினார்.
இதனிடையே, வாரம் ஒரு முறை ஆன்லைனில் தனது பக்தர்களுக்குச் சத்சங்கம் நிகழ்ச்சியின் மூலம் சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார்.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், தாண்டவம் ஆடி வரும் நிலையில், சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்தியாவில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, தற்போது ஆன்லைனில் தோன்றிய நித்தியானந்தா, கொரோனா வைரஸ் குறித்தும் பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அதில், “கொரோனா வைரசால் நாங்கள் பாதிக்கப்படவில்லை. இது எதிர்காலத்திலும் எங்களுக்கு வராது. ஏனென்றால், பரமசிவன் எங்களைப் பாதுகாக்கிறார். காலபைரவர் எங்களுக்குப் பாதுகாவலாக இருக்கிறார்” என்று கல கலப்பாகப் பேசி உள்ளார்.
நித்தியானந்தாவின் கொரோனா வைரஸ் குறித்த பேச்சு, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.