“திருமணமாகாமல் மன உளைச்சலில் உள்ள எங்களுக்கு, கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து தாருங்கள் ப்ளீஸ்” என்று, தமிழகத்தைச் சேர்ந்த 90S கிட்ஸ் இளைஞர்கள் நித்தியானந்தாவுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ள சம்பவம், இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாமியார் நித்தியானந்தா மீது, பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களைக் கடத்தியதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தாலும், அது பற்றி எல்லாம் கவலைப்படாத மனிதனாக, ஈக்வேடார் அருகே “கைலாசா” என்ற பெயரில் ஒரு தீவை உருவாக்கி, தனி நாடாக உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

புதிதாக அமைய உள்ள “கைலாசா நாட்டில் தங்கத்தில் கரன்சி இருக்கும் என்றும், 56 நாடுகளுடன் வர்த்தகம் நடைபெறும்” என்றும், சாமியார் நித்தியானந்தா அடுத்தடுத்து சில அதிரடியான மற்றும் அசத்தலான அறிவிப்புகளை அவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். 

“வாடிகன் வங்கியை மாதிரியாகக் கொண்டு “ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா” என்ற புதிய வங்கி மிக விரைவில் உருவாக்கப்பட உள்ளது” என்றும், நம் கைலாசா நாட்டிற்கு என்று சுமார் 300 பக்க பொருளாதார கொள்கையையும் புதிதாக உருவாக்கி உள்ளதாகவும்” அவர் அடுத்தடுத்து டிவிஸ்ட் கொடுத்தார். இதனால், தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் ஆச்சரியத்துடன் அவரை பார்த்து வருகின்றனர்.

அதே நேரத்தில், “கன்னித்தீவ தேடி நாயா அலையிற சிந்துபாத் எங்க.. கன்னிகளை வச்சே ஒரு தீவு ரெடி பண்ணுன நம்ம நித்தியானந்தா எங்க..” என்று, தெறிக்கவிட்ட திருமண பேனர்களும் கடந்த மாதம் இணையத்தில் பெரும் வைரலாகி வந்தது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மதுரையில் இருந்து குமார் என்பவர், கைலாசா நாட்டில் தனது ஓட்டலைத் தொடங்க அனுமதி வேண்டும் என நித்யானந்தாவுக்கு கடிதம் எழுதினார். அவரைத் தொடர்ந்து, திருச்சியைச் சேர்ந்த நியூ சாரதாஸ் ஜவுளிக்கடை உரிமையாளரும் கைலாசா நாட்டில் தொழில் தொடங்க அனுமதி கோரி இருந்தார். 

இதன் காரணமாக, “கோரிக்கை விடுத்த இருவருக்கும் அனுமதி வழங்கும்படி உத்தரவிட்டுள்ளதாகவும், விரைவில் அனைத்து தொழில்களும் கைலாசாவில் தொடங்கப்படும்” என்றும், நித்தியானந்தா தெரிவித்தார். 

அதன் தொடர்ச்சியாக, “கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும்” என்று, மதுரையைச் சேர்ந்த வீர மரபு வீர விளையாட்டுக் கழகம் சார்பில் நித்தியானந்தாவுக்குக் கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளனர். அந்த கடிதத்தில், “உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா நோய் தோற்று அதிகரித்துள்ளதால், கோயில் விழாக்கள் மற்றும் வீர விளையாட்டுக்களை நடத்துவது சவாலாக உள்ளதாகவும், கொரோனா நோய்த் தொற்றின் தாக்கமே இல்லாத கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும்” என்றும், வீர மரபு வீர விளையாட்டுக் கழகம் என்ற அமைப்பு கோரிக்கை விடுத்து இருந்தது.  

“கைலாசா நாட்டிற்குத் தொடர்ந்து கோரிக்கைகள் வருவதாலும், பலரும் “கைலாசா நாட்டை புகழ் பாடுவதாலும், தற்போது சாமியார் நித்தியானந்தா குஷியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த  90S கிட்ஸ் இளைஞர்கள் சாமியார் நித்தியானந்தாவுக்கு புதிய கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளனர். 

“திருமண வேண்டுகோள்” என்று தலைப்பிட்ட அந்த கடிதத்தில், அனுப்புதல் என்ற இடத்தில் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர்கள், தமிழ்நாடு என்றும், பெறுதல் சுவாமி நித்தியானந்தா, கைலாசா நாட்டு அதிபர், கைலாசா என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.

அந்த கடிதத்தில், “சுவாமி, 1990 ஆம் ஆண்டு முதல் பிறந்த நாங்கள், தற்போது பல ஆண்டுகளாகத் திருமணத்திற்குப் பெண் கிடைக்காமல் தவித்து வருகிறோம். எங்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் பிறந்தவர்களுக்குத் திருமணம் ஆகி விட்டது. இதனால் நாங்கள் கடும் மன உளைச்சலில் உள்ளோம். தயவு செய்து உங்கள் ஆசிரமத்தில் இருக்கும் பெண்களை எங்களுக்கு திருமணம் செய்து கொடுத்து, கைலாசா நாட்டில் ஒரு குடியிருப்புடன், அரசாங்க வேலை கொடுத்து, எங்கள் மனக்கவலையைத் தீர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.

முக்கியமாக, கடிதத்தின் இறுதியில், “இப்படிக்கு, மிகுந்த எதிர்பார்ப்புடன் தங்கள் சிஷ்யன்கள் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர்கள்” என்றும், குறிப்பிட்டு எழுதி இருக்கிறார்கள். 

இந்த கடிதம் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. மேலும், நித்தியானந்தாவையும், தற்போது அவர் உள்ள கைலாசா என்ற இடம் மற்றும் அவருடைய பெண் சீடர்கள் பற்றியும் ஏராளமாகக் கடந்த சில வருடங்களாகவே இணையத்தில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. 

அதன் தொடர்ச்சியாக தற்போது 1990 ஆம் ஆண்டில் பிறந்தவர்கள் என்ற பெயரில் திருமணமாகாமல் மன உளைச்சலில் உள்ள தங்களுக்கு கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து வைக்குமாறு கோரிக்கை விடுத்து அனுப்பப்படுவது போன்ற கடிதமும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.