முதலிரவில் மனைவியிடம் கேட்கக் கூடாத கேள்வியை கணவன் கேட்டதால், மன உளைச்சலுக்கு ஆளான புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

வேலூர் மாவட்டம் ஊசூர் அடுத்துள்ள கோவிந்தரெட்டி பாளையத்தை சேர்ந்த சந்திரலேகா என்ற இளம் பெண்ணுக்கும், அங்குள்ள காட்பாடி பிரம்மபுரம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்ற இளைஞருக்கும் கடந்த மாதம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி பெற்றோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்த 23 ஆம் தேதி இரவு புதுமண தம்பதிகளான பாலாஜிக்கும் - சந்திரலேகாவிற்கும் முதலிரவு நடந்துள்ளது. 

முதலிரவில் பல விதமான கனவுகளுடன், தன் வாழ்க்கையின் அத்தியாயத்தைத் தொடங்க ஒட்டு மொத்த எதிர்பார்ப்புகளுடன் காலடி எடுத்து வைத்திருக்கிறார் புதுமணப் பெண் சந்திரலேகா. ஆனால், முதலிரவு அறைக்குச் சென்ற சந்திரலேகாவிற்கு அதிர்ச்சியே அங்குக் காத்திருந்துள்ளது. 

“முதலிரவின் போது கணவர் பாலாஜியிடம் ஆசீர்வாதம் வாங்கி உள்ளார் அவர் மனைவி. அப்போது, அவரை தன் அருகில் அமர வைத்த பாலாஜி, தன் மனைவியிடம் கேட்க கூடாத பல கேள்விகளைக் கேட்டு, அவரை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளார்.

அதாவது, “நீ கற்புடன் தான் இருக்கிறாயா?” என்று முதல் கேள்வி கேட்டுள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சுக்கு நூறாக உடைந்து போனார்.

அதன் தொடர்ச்சியாக, மீண்டும் கேள்விகளைக் கேட்கத் தொடங்கிய பாலாஜி, “இவ்வளவு அழகாக இருக்கும் நீ, இதற்கு முன்பு யாரையும் காதலிக்கவில்லையா? ஒருவரைக் கூட காதலிக்க வில்லையா?” என்று, அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

தொடர்ந்து, “நீ யாருடனும் உறவு வைத்துக் கொண்டது இல்லையா?” என்று, தன் மனைவியைப் பார்த்து, கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் பாலாஜி கேட்டதாகத் தெரிகிறது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், சுமந்து வந்த ஒட்டு மொத்த கனவுகளும் கலைந்து, எதிர்காலம் எல்லாம் திக்கு தெரியாத காட்டில் நிற்பதாய் உரைந்து போய் உள்ளார். அவரால் அதிர்ச்சியில் இருந்து சற்றும் மீள முடியவில்லை.

இந்த கேள்விகளால், அதிர்ச்சி மட்டும் ஆகாத சந்திரலேகா, கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளார். இதனால், பல்லைக் கடித்துக்கொண்டு அங்கே இருந்துள்ளார்.

இதனையடுத்து, அடுத்த ஓரிரு நாட்களில் பெண் வீட்டாருக்குப் புதுமண தம்பதிகள் இருவரும் வந்துள்ளனர். அப்போது, திருமணத்திற்கு வராத ஆண் நண்பர் ஒருவர், சந்திரலேகாவின் வீட்டிற்கு வந்து, புதுமண தம்பதிகள் இருவருக்கும் தனது வாழ்த்துக்களைக் கூறி உள்ளார்.

அப்போது, தோழியின் கணவர் பாலாஜியிடம், “சந்திரலேகாவின் குண நலன்களையும் மிகவும் பாராட்டிப் புகழ்ந்து” கூறியதாகத் தெரிகிறது. 

இதனைத் துளியும் ஏற்றுக்கொள்ளா கணவன் பாலாஜி, ஆண் நண்பர் சென்ற பிறகு மனைவி சந்திரலேகாவுடன் சண்டைக்குச் சென்றுள்ளார். 

மேலும், “வீட்டிற்கு வந்த ஆண் நண்பரையும், சந்திரலேகாவையும் சேர்த்து வைத்து பாலாஜி தவறாகப் பேசியதோடு, கடும் வாக்குவாதத்திலும்” ஈடுபட்டுள்ளார். இதனால், இன்னும் எரிச்சல் அடைந்த மனைவி சந்திரலேகா, தனது அம்மா வீட்டிலேயே தன் மனதில் உள்ள மன குமுறல்களை எல்லாம் கடிதமாக எழுதி வைத்துவிட்டு, அங்கு இருந்த மண்ணெண்ணய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

அத்துடன், “என் தங்கைகளுக்குத் திருமணம் செய்யும் போது, நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்து திருமணம் செய்து வையுங்கள்” என்றும், என் பெற்றோரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
 
இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த சந்திரலேகாவின் பெற்றோர், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து விரைந்து வந்த போலீசார், சந்திரலேகாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, திருமணமான ஒரே வாரத்தில் புதுமணப் பெண் சந்திரலேகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம், சந்திரலேகாவின் குடும்பத்தாரையும் அவரது சொந்த ஊர் மக்களையும் கடும் சோகத்திலும், துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

அதேபோல், விருதுநகர் அருகே திருமணமான மறுநாளே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.