இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய வகையால் ஆப்பிரிக்காவில் புதிதாகத் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த புதிய வைரஸ் வீரியம் கொண்டதாக இருப்பதால் மருத்துவர்கள் அச்சம் கொண்டு இருக்கிறார்கள். உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது என்று தென் ஆப்பிரிக்க அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த புதிய வகை வைரஸுக்கு 501.வி2 என்று பெயரிடப்பட்டுள்ளது. நவம்பர் மாத இடையிலிருந்து நடத்தப்பட்ட ஆய்வில் தென் ஆப்பிரிக்காவில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் 90 சதவிகிதம் இந்தப் புதிய வைரஸ்தான். ஆப்பிரிக்கா மட்டுமின்றி பிரிட்டனிலும் பரவி வருகிறது. ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா, அயர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பயணக் கட்டுப்பாடுகள், பொது முடக்கம் உள்ளிட்டவற்றை அறிவிக்க தொடங்கி விட்டனர்.


பிரிட்டனில் அதிகமாக பரவி வரும் இந்தப் புதிய வகை கொரோனா வைரஸின் தாக்கத்தினால் பிரிட்டனிலிருந்து சர்வதேச விமானங்கள் டெல்லிக்கு வருவதற்கு டிசம்பர் 31-ம் தேதி வரை தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 


இந்த புதிய வைரஸுக்கும் சேர்த்து தான் தடுப்பூசி பணிகள் தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது. கொரோனா மற்றும் இந்த புதிய வைரஸுக்கும் சேர்த்து தடுப்பூசி அப்டேட்டாகி வரும் வரை  முகக்கவசம், சமூக விலகலைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என உலக சுகாராத அமைப்பு தெரிவித்து இருக்கிறது.