“சென்னையில் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 12 மணியில் இருந்து, ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை அத்தியாவசிய வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை” என்று, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.

அதாவது, தமிழகத்தில் கொரோனா நோய்த் நொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும், தற்போது வேகமாக பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் விதமாகவும் தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.

அதன்படி, “பண்டிகை காலங்களில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதால், பொது மக்கள் பொது வெளியில் ஒரே நேரத்தில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும் விதமாக, சில அறிவிப்புகளையும்” தமிழக அரசு அறியுறுத்தி உள்ளது. 

அந்த வகையில் தான், “வரும் 31 ஆம் தேதி இரவு தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகளில் பொது மக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என்றும், இதனால், அனைவரும் வீடுகளிலேயே அவரவர் குடும்பத்தினருடன் புத்தாண்டினை மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கொண்டாடுமாறும்” கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில், “தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் 31 ஆம் தேதி இரவு பொது மக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படுவதாக” டிஜிபி சைலேந்திரபாபு நேற்றைய தினம் அறிவித்தார்.

தற்போது, அதன் தொடர்ச்சியாக, “சென்னையில் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 12 மணியில் இருந்து, ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை அத்தியாவசிய வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை” என்று, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்து உள்ளார்.

இந்த புதிய கட்டுபாட்டின்படி, 

- சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை இரவு 12 மணி முதல் ஒன்றாம் தேதி காலை 5 மணி வரையிலான கால கட்டத்திற்குள், அத்தியாவசிய வாகன போக்குவரத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

- அந்த நேரத்தில் மற்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.

-  பொதுமக்கள் அனைவரும் நாளை இரவு 12 மணிக்கு முன்பாகவே தங்கள் பயணங்களை முடித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

- புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொது மக்கள் வெளியிடங்களில் ஒன்று கூடக்கூடாது என்றும், கடற்கரையை ஒட்டிய சாலைகளான காமராஜர் சாலை, ஆர்.கே.சாலை, ராஜாஜி சாலை, அண்ணாசாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்களில் வானங்களை நிறுத்தி புத்தாண்டு கொண்டாடக்கூடாது என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், மாநாட்டு அரங்குகள், கிளப்புகள் போன்றவற்றில் புத்தாண்டு வர்த்தக நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தற்போது விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, புத்தாண்டையொட்டி சென்னையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்து உள்ளார்.