வரப்போகும் 2021 சட்டமன்ற தேர்தலுக்குமுன் அவர் நிச்சயம் விடுதலையாகி வடுவார் என்ற நிலையில் அவரது விடுதலை மூலம் தமிழக அரசியல் களத்தில் என்ன விதமான மாற்றங்கள் இருக்கும் என்பது தொடர்பான பல யூகங்கள் கிளம்பியுள்ளன. 

சசிகலா தனக்கு தண்டனை கிடைத்தவுடன் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் நாற்காலியில் அமர்த்தினார். ஆனால், பின்னர் எடப்பாடி பழனிச்சாமியும், தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து விட்டனர். அதனால் சசிகலா ஓரம்கட்டப்பட்டார். எனினும் சசிகலாவிற்கு இன்னும் கட்சிக்குள் பெரும் ஆதரவு இருப்பதாகவும், அவர் விடுதலையானால் அரசியல் களம் மாறும் என்றும் கூறப்படுகிறது.

அவர் ஒரு அரசியல் சக்தியாக மாறாமல் இருக்க, தேர்தல் வரை அவர் விடுதலையை தள்ளிப் போட சில காய்நகர்த்தல்கள் செய்யப்படுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், பினாமி பெயர்களில் வாங்கப்பட்ட சசிகலாவின் கோடிக்கனக்கான சொத்துக்களை கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வருமானவரித் துறையினர்  முடக்கினர். கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அப்படி கைப்பற்றப்பட்ட சொத்துக்களில், ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டன் வேதா நிலையத்திற்கு எதிரே கட்டிக்கொண்டிருக்கும் புதிய கட்டிடமும் அடங்கும். இதில் வேதா நிலையம், தற்போது முழுவதுமாக அரசுடைமையாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சசிகலா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியபோது கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், பினாமி பெயரில் சசிகலா தரப்பினர் சொத்துக்கள் வாங்கியது தெரியவந்திருப்பதாக வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்துதான் வருமானவரித் துறையின் பினாமி தடுப்புப் பிரிவு சட்டத்தின்கீழ் தற்போது, ரூ.300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன எனக்கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவு ஆகஸ்ட் இறுதியேலேயே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், பினாமி பிரமுகர்களுக்கும் அந்த சொத்துக்களை பத்திரப்பதிவு செய்த அலுவலகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பினாமி நிறுவனங்களை நடத்தும் 2 நபர்களின் பெயர்களில் இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. அவர்கள் இருவரும் சசிகலாவின் உறவினர்கள்.

இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் விரிவான விசாரணையின் முடிவில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.1,600 கோடி மதிப்பிலான சசிகலாவுக்கு சொந்தமான பினாமி சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கம் செய்ததாக சில தகவல்கள் சொல்கின்றன.

இதைத்தொடர்ந்து தற்போது சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான ரூ. 2,000 கோடி சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டது. பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது. முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ. 2,000 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.

ஏற்கனவே செப்டம்பர் 1-ம் தேதி ரூ.300 கோடி மதிப்பிலான சசிகலாவின் சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக வருமான வரித்துறை கூறியுள்ளதாவது : ``பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ், சசிகலா, சுதாகரன், இளவரசி பெயரில் உள்ள 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்டேட் சொத்துகளை முடக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.

2017ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலாவிற்கு சொந்தமான 200 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் கிடத்த ஆவணங்கள் அடிப்படையில் தொடர் சொத்துக்கள் முடக்கும் நடவடிக்கையில் வருமான வரித்துறை தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு சசிகலாவின் சுமார் ரூ.1500 கோடி மதிப்புள்ள சொத்தும், கடந்த மாதம் போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் வீடு உள்ளிட்ட 300 கோடி மதிப்புள்ள சொத்தும் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.