நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு முன்னாள் நீதிபதிகள் 6 பேர் சேர்ந்து கடிதம் எழுதி உள்ளனர்.

தமிழத்தில் நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால், மனசாட்சியை உலுக்கிய நிலையில், நடிகர் சூர்யா இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 

அந்த அறிக்கையில், “கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து, காணொலியின் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என்று ஒரு வரியையும் சுட்டிக்காட்டி இருந்தார்.

இந்த வரியை மேற்கொள் காட்டிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர் சூர்யாவின் கருத்து, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதால், அவர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதினார். இதனால், உலகம் முழுவதும் உள்ள நடிகர் சூர்யா ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக இணையத்தில் ஒரு கருத்து யுத்தமே நடத்தினார்கள்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பாரதிராஜா, “நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், பேசவும் மாட்டார்” என்று குறிப்பிட்டார். 

மேலும், “நடிகர் சூர்யாவின் கருத்துக்கு எனது முழு ஆதரவை தெரிவிப்பதாகவும்” வெளிப்படையாகவே அறிவித்தார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீதிபதிகளை அவதூறாக பேசியது தொடர்பாக நடிகர் சூர்யா, அவர் மனைவியும் நடிகையுமான ஜோதிகா, சூர்யாவின் தந்தை நடிகர் சிவக்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி மதுரையைச் சேர்ந்த சில வழக்கறிஞர்கள், மதுரை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலத்தில் புகார் அளித்தனர். அந்த மனுவில், குறிப்பிட்ட 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வலியுறுத்தி இருந்தனர்.

ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத நடிகர் சூர்யா, “ஒன்றிணைவோம்.. மாணவர்களோடு துணை நிற்போம் வா” என்று, தனது டிவிட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்து உள்ளார்.

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “ஒன்றிணைவோம்.. மாணவர்களோடு துணை நிற்போம். ஒருத்தர் படிச்சா அந்த வீடு மாறும். ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும். இந்த பொருளாதார நெருக்கடியில் பல மாணவர்கள் தங்களது கல்வியை பாதியிலேயே கை விட்டு இருக்கிறார்கள். நாம நினைச்சா அத மாத்திடலாம்” என்று, தனது டிவிட்டர் பக்கத்தில் சூர்யா பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், “நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தேவையில்லை” என்று, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு முன்னாள் நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, சுதந்திரம், அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் கூட்டாக சேர்ந்து கடிதம் எழுதி உள்ளனர்.

அந்த கடிதத்தில், “4 மாணவர்கள் மரணம் தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றும் நீதிபதிகள் வலியுறுத்தி உள்ளனர்.

“நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளதை போல எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றும், நீதிபதிகள் வலியுறுத்தி உள்ளனர்.

அத்துடன், “சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் கல்வி முடித்து விட்டு நல்ல வேலை வாய்ப்பை பெற்றுள்ள நிலையில், பெருந்தன்மையாக கைவிட வேண்டும் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறை உள்ளதால் தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுப்பது எங்கள் கடமை” என்றும், 6 நீதிபதிகள் ஒன்று சேர்ந்து குறிப்பிட்டு உள்ளனர்.

இந்த தகவலும் இணையத்தில் வைரலாகி வருவதால், நடிகர் சூர்யாவிற்கு ஆதரவு குரல்கள் இணையத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாத்தில் ஈடுபட்டு உள்ளனர்.