ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நீட் தேர்வில் பயிற்சி பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி தேவை என்னும் அந்தப் பட்டியலில் நேற்று வரை 9,842 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். நேற்று ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் கூடுதலாகப் பதிவு செய்துள்ளனர்.

ஆன்லைன் விண்ணப்பப் பதிவு முடிவு பெற்றபின் ஓரிரு நாட்களில் அரசு சார்பில் நீட் பயிற்சி தொடங்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முழுமையாகப் பயிற்சி வழங்கும் வகையில், அவர்களுக்கு விரைவிலேயே பயிற்சியைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகளைத் திறப்பதற்குத் தற்போதைக்கு சாத்தியக் கூறுகள் இல்லை. நடப்புக் கல்வி ஆண்டில் மட்டும் அரசுப் பள்ளிகளில் 5 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்த பயிற்சி சேர்க்கையில், குறைவாக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 2 ஆம் முறையாக நீட் பயிற்சி அளிக்கப்படும் என்று சில தினங்களுக்கு முன் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக செய்தியாளர்களை சமீபத்தில் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ``நீட் தேர்வில் குறைவான மார்க் எடுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் முறையாக ஆன்லைனில் நீட் பயிற்சி அளிக்கப்படும். பிளஸ் டூ முடித்த 9,438 மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்" என்றார்.

கடந்த வாரம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது, 

``நீட் தேர்வுக்காக 412 மையங்களில் 6 ஆயிரத்து 618 மாணவர்களுக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த 747 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பெரியகுளத்தைச் சேர்ந்த ஜீவித் குமார் என்ற மாணவர், இந்தியாவிலேயே அரசுப் பள்ளியில் படித்து 664 மதிப்பெண்ணை எடுத்து முதலிடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார்

தமிழகத்தில் 412 நீட் பயிற்சி மையங்களை உருவாக்கவும், கட்டமைப்பு வசதி செய்யவும் கடந்த இரு ஆண்டுகளில் ரூ.57 லட்சம் செலவு செய்யப்பட்டது. அதன்பின்னர், நீட் பயிற்சிக்காக தனியார் நிறுவனத்துக்கு ஒரு ரூபாய்கூட அரசு வழங்குவதில்லை. மாணவர்களுக்கும் செலவு செய்வதில்லை. தகுதி வாய்ந்த தனியார் நிறுவனம் இலவசமாக நீட் பயிற்சி அளிக்க முன்வந்தாலும், அதனை ஏற்கத் தயாராக இருக்கிறோம். இதுதான் அரசின் கொள்கை. அரசின் நிதியை இதற்கென செலவிடும்போது, டெண்டர் உள்ளிட்ட நடைமுறைகள் மற்றும் ஏன் இதற்காக செலவிட்டார்கள் என்பது போன்ற கேள்விகள் எழும் வாய்ப்புகள் உள்ளன. நடப்பு ஆண்டு நீட் பயிற்சி அளிப்பதற்கான பட்டியல் டிசம்பர் மாத இறுதிக்குள் தயார் செய்யப்படும். அதன் பின்னர் மாணவர்களை தேர்வு செய்து, பயிற்சி அளிக்கப்படும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.